கோவை : தமிழக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழில் உறுதி மொழி ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
கோவை : தமிழக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழில் உறுதி மொழி ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 542 தொகுதிகளில் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் வெற்றிபெற்று, இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது. மாநிலக் கட்சியான தி.மு.க. தமிழகத்தில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதுதவிர துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேனி மக்களவை தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வென்றது.
இதனிடையே 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முன்னதாக இக்கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை இடைக்காலத் தலைவராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த எம்.பி. வீரேந்திர குமார் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், ஆந்திரா, அசாம், பிகார், ஜம்மு-காஷ்மீர், கேரளம், மத்தியப் பிரதேசம், ஒடிஸா உள்பட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த புதிய எம்.பி.க்களுக்கு மக்களவை இடைக்காலத் தலைவர் வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார், வடசென்னை தி.மு.க. எம்.பி கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், டிஆர். பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன், தென்சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி, தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தமிழக எம்.பி.க்கள் தமிழில் உறுதி மொழி ஏற்றனர். மேலும், காந்தி வாழ்க, தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கருணாநிதி வாழ்க என அவர்கள் கோஷமிட்டனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரே ஒரு எம்.பி.யான ரவிந்திரநாத், வாழ்க எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா.. வந்தே மாதரம் எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்கையில், பா.ஜ.க. எம்.பி.க்கள் பலத்த கைத்தட்டலை கொடுத்தனர்.