நீலகிரி : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 54 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 440 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நீலகிரி : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 54 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 440 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் 6 வயது முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணியானது கடந்த ஏப்ரல் 8 முதல் தொடங்கி மே மாத இறுதி வரை நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,578 குடியிருப்புகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடந்தது. பள்ளியில் பயிலும் வயது வந்தும் பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இக்கணக்கெடுப்பில், நீலகிரி மாவட்டத்தில் 440 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி அம்பிகாபதி கூறுகையில், "கணக்கெடுப்பில் பழங்குடியின குழந்தைகள், தாழ்த்தப்பட்ட குழந்தைகள் மற்றும் ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அசாம் ஆகிய வடமாநிலங்களைச் சேர்ந்த 110 மாணவ, மாணவியர்கள் என மாவட்டம் முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள 440 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பில் கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அனைவரும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி வயதிற்கேற்ற வகுப்பில் நேரடிச் சேர்க்கை மூலமாகவும் மற்றும் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என தெரிவித்துள்ளார்.