கோவை : மேற்கு வங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களும், அதேபோல இந்திய மருத்துவ சங்கத்தின் வளாகத்தில் மருத்துவர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி மருத்துவரை உறவினர்கள் தாக்கியதைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் ஆகியவற்றை நடத்தி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும், இந்திய மருத்துவ சங்கத்தினரும் தொடர்ந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மருத்துவ மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் உரிய பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதேபோல, ப்ரூக் பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும், உரிய சட்டம் இயற்ற வேண்டும் என பல கோஷங்களை எழுப்பினர். மேலும், தனியார் மருத்துவமனைகள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவசரகால சிகிச்சைகள் வழக்கம்போல வழங்கப்படும் என அவர் கூறினர்.