கோவை : செல்வபுரம் அருகே உள்ள சித்த மருத்துவ சாலையில் சிகிச்சை பெற்ற இளம் பெண் தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததையடுத்து உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை : செல்வபுரம் அருகே உள்ள சித்த மருத்துவ சாலையில் சிகிச்சை பெற்ற இளம் பெண் தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததையடுத்து உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள கோவைபுதூர் நேதாஜி நகரை சேர்ந்த கணேசன் - மல்லிகா தம்பதியினரின் மகள் சத்யப்பிரியா (20). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாகவே மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, சத்யபிரியா தனியார் தொலைக்காட்சிகளில் பிரபலமாக விளம்பரங்களை செய்து வந்த செல்வபுரம் பகுதியில் உள்ள மனோன்மணி சித்த வைத்திய சாலையில் உறவினர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவர் மருத்துவர் குருநாதன் கொடுத்த மருந்துகளை சுமார் ஆறு மாதங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால், இந்த மருந்துகள் சத்திய பிரியாவுக்கு ஒத்துப் போகவில்லை. சத்திய பிரியாவின் உடல் நிலையை பாதிப்படைய செய்தது. மிகவும் உடல்நிலை மோசமான நிலையில், சத்யபிரியா கடந்த ஏப்ரல் 22ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இவரின் உடல்நிலை பாதிப்புக்கு காரணம் மருத்துவரின் தவறான மருந்து என சத்யபிரியா வின் பெற்றோர் கடந்த மே 1ஆம் தேதி செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால் மே 31-ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த சூழலில், இன்று அதிகாலை 2 மணிக்கு சத்யபிரியா சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சத்யபிரியா உயிரோடு இருக்கும் பொழுது புகார் அளித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சட்ட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட செல்வபுரம் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சத்திய பிரியாவின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், மனோன்மணி சித்த வைத்திய சாலையை மூட வேண்டுமெனவும், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். காவல்துறையினர் அளித்த உறுதியை அடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.