நீலகிரி : பழங்குடியினர்களுக்கான உரிமை மற்றும் சட்டங்கள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பழங்குடியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
நீலகிரி : பழங்குடியினர்களுக்கான உரிமை மற்றும் சட்டங்கள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பழங்குடியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
நீலகிரி மாவட்ட சட்ட பணிகள் இணைக் குழு சார்பில் பழங்குடியினர்களுக்கான உரிமை மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் நடந்தது. முகாமில், நீலகிரி சட்டப்பணிகள் இணைக்குழு செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாநில சட்டப்பணிகள் இணைக்குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர், நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது :- நீலகிரி மாவட்டம் அழகாக உள்ளது. இதனை பாதுகாத்திட வேண்டும். இங்கு வாழும் மலைவாழ் மக்கள் எளிமையானவர்கள், அதேபோல், சாந்தமானவர்கள். நீலகிரி அழகை பாதுகாத்திட வேண்டும். தற்போது, பிளாஸ்டிக் ஒழிப்பிலும், மரம் நடுவதிலும் அரசு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. மக்களின் பங்களிப்பும் அவசியம். எனவே, தான் அரசின் திட்டங்கள் மற்றும் முயற்சிகள் முழுமை பெறும்.

சமூகத்தில் உள்ள கடை கோடி மக்களுக்கும் நீதி சென்றடைய வேண்டும். இதற்காக, நீதித்துறை முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். காலதாமதமாக எந்த ஓரு நீதியும் சென்றடையக் கூடாது. விரைவாக வழக்குகளை முடிக்க வேண்டும். விரைவாக வழங்கப்படும் நீதியே, சிறந்த நீதியாகும். பழங்குடியின மக்கள் தங்களது குறைகளை மாவட்டத்தில் உள்ள சட்டப்பணிகள் இணைக்குழுவிடம் மனுவாக அளித்தால், அவர்கள் அதனை விசாரணை மேற்கொண்டு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள். பழங்குடியின மக்களுக்கு போதுமான கல்வி இல்லாததால், சட்டப்பணிகள் இணைக்குழு உள்ளது குறித்து தெரிவித்ததில்லை. இது அனைத்து பழங்குடியின மக்களுக்கும் தெரியும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்,
இதில், கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் பேசுகையில், "தென்னகத்தின் தண்ணீர் தொட்டியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இயற்கை அழகு நிறைந்த மாவட்டம். ஆனால், தற்போது மாவட்டத்தின் அழகு பாதித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களும் இந்த மாவட்டத்தின் அழகையும், இயற்கையையும் பாதுகாக்க முன் வரவேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாத்திட வேண்டும். பழங்குடியின மக்களின் உரிமைகள், அவர்களுக்குச் சென்றடைய வேண்டும். நாம் உரிமைகள் பற்றி மட்டும் பேசாமல், நாம் மக்களுக்காக என்ன செய்கிறோம் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். சலுகைகள் மற்றும் திட்டங்கள் அரசிடமிருந்து முழுமையாக எதிர்பார்க்காமல், நாம் சொந்த காலில் நிற்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு கல்வி மிக அவசியம். அது அவர்களுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று உரிய தீர்வு காண வேண்டும்," என்றார்.