கோவை : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இஸ்லாமியர்களின் வீடுகளில் இரவு நேரங்கள் என்று கூட பார்க்காமல் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில், சோதனைகளை மேற்கொள்வதை தடுக்க வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
கோவை : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இஸ்லாமியர்களின் வீடுகளில் இரவு நேரங்கள் என்று கூட பார்க்காமல் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில், சோதனைகளை மேற்கொள்வதை தடுக்க வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள இஸ்லாமியர் குடியிருப்புகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சோதனை என்ற பெயரில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்துவது வேதனை அளிப்பதாக உள்ளது என இஸ்லாமியர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த நடவடிக்கைகளை தடுக்க வலியுறுத்தி பல்வேறு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் புகார் அளித்துள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது ;- கூட்டமைப்பின் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். கடந்த சில நாட்களாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பு தொடர்ந்து இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் முகநூல் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதன் அடிப்படையில் வீடுகளில் சோதனை என்ற பெயரில் பரபரப்பையும், பதட்டத்தையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படட்டும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவதையோ, விசாரணைக்கு உட்படுத்துவதையோ நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், சட்டத்துக்கு புறம்பாக இரவு நேரத்தில், தூங்கும் நேரத்தில் சோதனை என்ற பெயரில் துன்புறுத்துவது, சாதாரணமாக உபயோகிக்கக்கூடிய செல்போன்கள், லேப்டாப்கள், மெமரி கார்டுகள் போன்றவற்றை எடுத்துவிட்டு, பயங்கர ஆயுதங்கள் வெளியிடுவது போல் அறிக்கை வெளியிடுகின்றனர்.
கோவையில் சமூக நல்லிணக்கம் மலர வேண்டும் என்ற அடிப்படையில் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன. இச்சூழலில், பொதுமக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகள் குறித்து வேண்டாத, வெறுப்பான சூழலை ஏற்படுத்த என்.ஐ.ஏ. அமைப்பு அரசியல் காரணங்களுக்காக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கவும், நியாயமான முறையில் விசாரணை நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.