நீலகிரி : உதகை மற்றும் குன்னூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 டன் கலப்பட டீத்தூள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி : உதகை மற்றும் குன்னூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 டன் கலப்பட டீத்தூள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சோலூர் பகுதியில் உள்ள எம்.ஜி., தனியார் தேயிலை தொழிற்சாலையில் தேயிலை சிகப்பு கலர் ரசாயனம் கலப்படம் செய்து தேயிலை தூள் உற்பத்தி மேற்கொள்வதாக தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசு உத்தரவின் பேரில், தேயிலை வாரிய அதிகாரிகள் நேற்று இரவு சம்மந்தப்பட்ட தொழிற்சாலையில் திடீர் ஆய்வு நடத்தினர். அங்கு தேயிலை தூள் தயாராகிக் கொண்டிருந்தது.

தேயிலை தூள் உற்பத்தி மேற்கொள்ளும் பிரிவில் இரண்டு பேரலில் சிகப்பு ரசாயனம் கலந்த சாயம், தேயிலையில் கலக்க வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகளை பார்த்ததும், தொழிற்சாலை உரிமையாளர் சாதித் சேட் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
பின்னர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு சேர்த்து சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, நடத்திய விசாரணையில், அங்கு 8 டன் தயாரான தேயிலை தூள் ரசாயனம் கலந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இத்தொழிற்சாலையில் சாயம் கலந்து உற்பத்தி செய்யப்பட்ட மேலும் 32 டன் சாயம் கலந்த தேயிலை தூள் குன்னூர் குடோனில் விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், குன்னூரில் கடந்த 6 மாதங்களாக தேயிலை உற்பத்தி செய்யாமல் பூட்டி கிடந்த பிரபல 'ஹைபீல்டு' தனியார் தொழிற்சாலையை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, அதன் பெயரில் சாக்கு மூட்டைகளில் நிரப்பி விற்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த டீத்தூள் தயார் செய்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 டன் கலப்பட தேயிலை அழிக்கவும், தொழிற்சாலை உரிமத்தை ரத்து செய்யவும் தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசு தெரிவித்தார்.