கோவை : கோவையில் தமிழ்நாடு சிறப்பு காவல் 4 ஆம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கான குடியிருப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கோவை : கோவையில் தமிழ்நாடு சிறப்பு காவல் 4 ஆம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கான குடியிருப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவைபுதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4ஆம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கு 12.8 கோடி ரூபாய் மதிப்பில் 137 அடிக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இன்று இந்த குடியிருப்பு பகுதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொலி மூலம் துவக்கி வைத்தார்.

இந்த நிலையில், கோவைபுதூர் சிறப்பு காவல் 4ஆம் அணி வளாகத்தில் நடைபெற்ற காணொளி காட்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காவலர்களுக்கு குடியிருப்பு கட்டி கொடுத்த முதலமைச்சருக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது ;- நேற்று சென்னையில் நடந்த அ.தி.மு.க.வின் கூட்டம் தேர்தலுக்குப் பின் வழக்கமாக நடைபெறும் கூட்டம்தான். இதில், தி.மு.க. வெற்றி பெற்றது ஏன்..?, கட்சியை எப்படி பலப்படுத்துவது..? உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது போன்ற முடிவுகள் பேசப்பட்டது. அதேபோல, தொண்டர்கள் என்ன எதிர்பார்கிறார்கள், அதற்கு ஏற்ப எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காவும் தான் நேற்று கூட்டம் நடத்தது.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சகோதரர்கள் போல் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துகிறார்கள்.இதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என கோவை மாவட்டம் சூலூர் தொகுதி உட்பட 9 சட்டமன்ற தொகுதியில் மக்கள் வாக்களித்துள்ளதுள்ளனர். ஊடகங்கள் மட்டும் அல்ல, எதிர்கட்சியும் கட்சிக்குள் ஏதாவது நடக்கும் என எதிர்பார்கிறார்கள். ஆனால், அதுபோல எதுவும் நடக்காது. மத்தியில் தண்ணீர் மேலாண்மை குறித்த கூட்டத்திற்கு சென்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளேன். இவர்கள் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர்.
தமிழகத்தில் 5 ஆயிரம் கோடி நிதியில் தண்ணீர் விநியோகத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் இயற்கையான வறட்சி ஏற்பட்டுள்ளது. அதை எப்படி சரிவது என திட்டமிட்டு வருகிறோம். பொய்யன வாக்குறுதிகள் கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றதை மக்கள் புரிந்துள்ளனர். அதன் முடிவு உள்ளாட்சி தேர்தலில் தெரியும். பா.ஜ.க. தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தான் தமிழகத்திற்கு துரோகம் செய்யதுள்ளது. கொங்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டையாக மாறிவிட்டது என ஸ்டாலின் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்த, அவர் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை, என தெரிவித்தார்.