கோவை : மறைந்த தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மு. ராமநாதன் மற்றும் தி.மு.க. தீர்மானக்குழு உறுப்பினர் க.ரா.சுப்பையன் ஆகியோரது திருவுருவப்படம் கோவையில் இன்று திறக்கப்பட்டது.
கோவை : மறைந்த தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மு. ராமநாதன் மற்றும் தி.மு.க. தீர்மானக்குழு உறுப்பினர் க.ரா.சுப்பையன் ஆகியோரது திருவுருவப்படம் கோவையில் இன்று திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மறைந்த இருவரது திருவுருவப்படங்களையும் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து, எம்.பி.,க்கள் ஆ. ராசா, பி.ஆர். நடராஜன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மு. கண்ணப்பன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன், முன்னாள் எம்.பி. விடுதலை விரும்பி, தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பொங்கலூர் பழனிச்சாமி பேசுகையில், "கோவை தென்றல் மு. ராமநாதன் தி.மு.க.வுக்கு கிடைத்த பொக்கிஷம்.

அவரைப்போன்ற சொற்பொழிவாளர் தமிழகத்திற்கு கிடைப்பது அரிது. சாதாரண தொண்டனாக இருந்து 6 ஆண்டுக்கு மேல் சிறையில் தனது வாழ்வை கழித்தவர். அவரது நினைவு எல்லோராலும் பாராட்டக்கூடியதாக உள்ளது. க.ரா.சுப்பையன் வாதத்திலே வல்லவர் என்று கலைஞரே வாழ்த்தியவர். மிகவும் நேர்மையான ஒரு வழக்கறிஞராக வாழ்ந்தார்," என பேசினார்.
எம்.பி. பி.ஆர். நடராஜன் உரையாற்றுகையில், "கோவை தென்றல் ராமநாதனின் மேடைப் பேச்சுக்கு நீண்டகால ரசிகன் நான்.

3 மணிநேர மேடை பேச்சுக்கு இடைவெளி விட்டவர் மு. ராமநாதன். இந்த மாவட்டத்தை வழிநடத்தியவர். வழக்கறிஞர் க.ரா.சுப்பையன் தனது உழைப்பால் உயர்ந்தவர். 1998-ம் ஆண்டு மேலவை உறுப்பினராக்கி அழகு படுத்தியவர் கலைஞர். சாதாரண மக்களுக்காகவே வாழ்ந்தவர்," என்றார்.
இவரைத் தொடர்ந்து, எம்.பி. ஆ. ராசா பேசியதாவது :-

1996-ம் ஆண்டு நான் இளைஞனாக கோவை தென்றல் ராமநாதனோடு நாடாளுமன்றம் சென்றேன். அப்போது. அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பொதுக்கூட்டத்தில் சுமார் 3 மணிநேரம் பேசி மக்களை கட்டிப்போடக்கூடியவர் மு. ராமநாதன். மிகுந்த கடமையுணர்ச்சியுடன் வாழ்ந்தவர். அவரின் பேச்சுக்கள் குறித்த ஆடியோக்கள் இருந்தால் கழகத்திடம் ஒப்படையுங்கள். அவற்றை தொகுத்து வெளியிடத் தயாராக இருக்கிறேன்.
இதேபோல, குறுகிய காலத்தில் நாடாளுமன்றத்தில் க.ரா.சுப்பையன் ஆற்றிய உரை மகத்தானது. தி.மு.க.,வின் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் முழங்கியவர். பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் பொதுவாக குடும்பத்தை மறந்து விடுவர். குடும்பத்தையும் பார்க்க வேண்டும், மக்களையும் கவனிக்க வேண்டும் இந்த இருவரது குடும்பத்தினரும் மேம்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன் பேசுகையில், "கொங்கு மண்ணின் இரண்டு தங்கங்களை நாம் இழந்திருக்கிறோம்.

மு.ராமநாதன் எழுதிய புத்தகங்களைப் படித்தால்தான் தி.மு.க. வரலாறு, மூத்த தலைவர்கள் பட்ட துன்பங்களையும், தியாகங்களையும் தெரிந்துகொள்ள முடியும். அப்போது தான், அடுத்த தலைமுறைகள் இந்த இயக்கத்தைக் கட்டுக்காப்பது உறுதியாகும். இதேபோல, கோவை மாநகர கழக செயலாளராக இருந்த க.ரா.சுப்பையன் இந்த இயக்கத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். இந்த இருவர் வழியில் நாம் நடப்பதுவே இயக்கத்திற்குச் செய்யும் முதல் தொண்டாக இருக்க முடியும்," என பேசினார்.
கழக பேச்சாளரும். முன்னாள் எம்.பி.யுமான விடுதலை விரும்பி பேசுகையில், " கொம்பன் யானையை விட சிறப்புடன் வாழ்ந்து சென்றவர் மு. ராமநாதன். அவருடைய ரத்த உணர்வுகளைத் தாண்டி கழகத்தின் தொண்டர்களாக வாழ்ந்து உள்ளோம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 8 கோடி மக்களின் பாதுகாப்பை ஏற்று உள்ளார். மறைந்த மாணிக்கங்களின் படம் திறந்து வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.