கோவை : துடியலூர் அருகே மனைவியை கணவர் மற்றும் குடும்பத்தார் காரிலிருந்து வெளியே தள்ளி கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காதது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை : துடியலூர் அருகே மனைவியை கணவர் மற்றும் குடும்பத்தார் காரிலிருந்து வெளியே தள்ளி கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காதது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொப்பம்பட்டி குருடம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ஆர்த்தி (38). இவருக்கும் சென்னையைச் சேர்ந்த அருண் ஜூடு அமல்ராஜுக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடினால் இருவரும் மும்பை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, கணவன் மனைவி இருவரும் கோவையில் வசித்து வந்தனர்.இந்த சூழலில், விடுமுறை நாட்களை கழிக்க கணவர் குடும்பத்துடன் மனைவி ஆர்த்தியும் ஊட்டிக்கு சென்றுள்ளார். அங்கு ஆர்த்தியை கணவர் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஊட்டியிலேயே புகார் அளிக்கப்பட்டது. பின்னர், பேச்சுவார்த்தைக்கு பின் கோவைக்கு வந்து விட்டனர்.

இந்த நிலையில், கோவை துடியலூர் அருகே கடந்த மாதம் 9ஆம் தேதி தனது பெற்றோரை கணவர் ஜூடு காரில் அழைத்துக்கொண்டு வரும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் ஜூடு மனைவி ஆர்த்தியை தாக்கி காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டுள்ளார். இந்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. காரில் இருந்து கீழே விழுந்த ஆர்த்திக்கு தலை, மூட்டு உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி 17-ம் தேதி அவரது கணவர் மீது 274/2019 us 294 b,323,506(1), மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக மும்பையில் தற்போது வசித்து வரும் ஆர்த்தி சிம்பிளிசிட்டி செய்தி குழுவுக்கு கூறியதாவது :- நான் ஆபத்தான சூழலில் வசித்து வருகிறேன். எனக்கும், என் குழந்தைகளுக்கும் எந்த பாதுகாப்பும் கிடையாது. பாதிக்கப்பட்டுள்ள நான் புகார் அளித்தும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு ஆகியும், இதுவரை துடியலூர் போலீசார் என் கணவரை கைது செய்யவில்லை. இது மிகவும் எனக்கு வருத்தமளிக்கிறது. கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை குடும்ப பிரச்சினையாக காவல்துறை பார்க்கிறது. ஆனால், இது மூன்று உயிர்களின் பிரச்சினை, என வேதனையுடன் தெரிவித்தார்.