கோவை : கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவனைப் பள்ளியில் சேர்த்து விட்டு தற்போது கட்டண வசூலில் ஈடுபட்டிருக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவனின் வளர்ப்பு தாய் மனு அளித்தார்.
கோவை : கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவனைப் பள்ளியில் சேர்த்து விட்டு தற்போது கட்டண வசூலில் ஈடுபட்டிருக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவனின் வளர்ப்பு தாய் மனு அளித்தார்.
கோவை வீரபாண்டி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. கோவை மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தனது சகோதரரின் மகனுடன் வந்த மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- தனது சகோதரன் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டதால், அவரது இரு மகன்களையும் வளர்த்து வருகிறேன். இந்த நிலையில், சகோதரனின் மூத்த மகனான ஆன்ரோசனை (4) கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் சேரத்தேன். அதன்படி, யூ.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என அந்த பள்ளியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டு எல்.கே.ஜி. வகுப்பில் தொடர பள்ளி நிர்வாகத்தினர் 30,000 ரூபாய் கேட்கின்றனர். இலவச கல்வி என்று கூறிவிட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைக்காக ஏற்கனவே பணம் செலுத்தி விட்ட நிலையில், தற்போது கல்வி கட்டணம் கேட்கின்றனர். இதனால், தனது சகோதரரின் மகன் ஆன்ரோசனை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்ப இயலாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இலவச கல்வி என்று கூறிவிட்டு தற்போது கட்டணம் வசூலிக்கும் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலவச கல்விக்கு தனியார் பள்ளிகள் பணத்தை பெற்றுக் கொண்டு கட்டாயப்படுத்தி பணம் பெறுவதாகவும், கல்வி துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அரசு வழங்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்பட்டு இலவச கல்வி வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.