கோவை : பொதுவாக பாம்புகள் என்றாலே பொதுமக்களை பழிவாங்கும் குணம் கொண்டது, அதன் விஷம் விலைமதிப்பற்றது, 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாக மாணிக்கத்தை கக்கும் என்ற எண்ணங்கள் மக்களிடம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
கோவை : பொதுவாக பாம்புகள் என்றாலே பொதுமக்களை பழிவாங்கும் குணம் கொண்டது, அதன் விஷம் விலைமதிப்பற்றது, 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாக மாணிக்கத்தை கக்கும் என்ற எண்ணங்கள் மக்களிடம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல், சினிமா திரைப்படங்களிலும் பாம்புகள் மனிதர்களை பழிவாங்கும் வில்லனாகவும் சித்தரித்து மக்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். பெரும்பாலும் பாம்புகள், மனிதர்களினால் கொல்லப்படும்
சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. மனிதர்களிடம் பாம்புகளைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவை தொடர்ந்து கொல்லப்படுவதை உணர்ந்து, சிங்காநல்லூர் குளப் பகுதியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
குயிப் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட 15-வது இயற்கை வழி நிகழ்ச்சியில் பாம்புகளின் வரலாறு மற்றும் உண்மைகளைப் பற்றி விரிவாக விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இயற்கை கல்வி பயிற்றுநர்களும், பாம்பு மீட்பவர்களுமான மகேஷ், கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்று பாம்புகள் குறித்த தகவல்களை எடுத்துரைத்தனர்.

இதில், 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இந்தியாவில் இருக்கும் பாம்புகளின் வகைகள் மற்றும் மனிதர்களுக்கும், பாம்புகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், பாம்புகளுக்கும், இயற்கைக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பொதுவாக, பாம்புகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் மட்டுமே அதனை கண்டு பொதுமக்கள் பயப்படுகின்றனர் எனக் கூறிய பாம்பு பிடிப்பவரான மகேஷ், விஷத்தன்மை கொண்ட 60 வகை பாம்பினங்கள் உள்பட மொத்தம் 270 வகையான பாம்பு இனங்கள் குறித்து கூறினார்.
"விஷத்தன்மை கொண்ட 60 வகையான பாம்பு இனங்களில் பெரும்பாலும் கடலில் வாழ்பவையே ஆகும். மற்றவை உயரமான மலைப் பகுதிகளில் வாழும் தன்மை கொண்டவை. வெறும் 4 வகையான விஷத்தன்மையுடைய பாம்பு இனங்களே மனிதர்கள் வாழும் குடியிருப்புகள் அருகாமையில் இருக்கக் கூடியவை. சுருட்டை விரியன், கண்ணாடி விரியன், நாகம், கட்டு விரியன் ஆகியவையாகும். பவளப்பாறை பாம்பு நகர்ப்புறங்களில் காண்பது மிகவும் அரிதானது," என்கிறார் மகேஷ்.

குறிப்பாக, இந்த 4 வகையான விஷத்தன்மையுடைய பாம்பு இனங்கள் சிங்காநல்லூர் குளத்தில் தென்படுவதாக குயிப் அமைப்பின் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
"சுருட்டை விரியன் மற்றும் காமன் கேட் பாம்பும் ஒரே மாதிரியான உடல் அமைப்பை கொண்டது. அதன் தலைகளில் இருக்கும் குறிகள் மட்டுமே வேறுபடும். சுருட்டை விரியனின் தலையில் கூட்டல் குறி போன்ற அச்சு இருக்கும்.

காமன் கேட் பாம்பில் ஒய் எழுத்து போன்ற அச்சு இருக்கும்," என்றார் அவர்.
பாம்புகளிலேயே கட்டு விரியன்தான் அதிக விஷத்தன்மை கொண்டதாகும். அது கடித்தால் மனிதர்களுக்கு வலியே இல்லாமல் இருக்கும்.

இந்த வகையிலான பாம்புகளே பிற பாம்பு இனங்களை உணவாக உட்கொள்வதால், பாம்புகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

"நஞ்சுகளை முறிக்கும் மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளில் இருந்தாலும், பெரும்பாலான பாம்புகள் கடித்தவர்களை குணப்படுத்த முடியாது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிகளவிலான பாம்பு கடி மரணங்கள் ஏற்படுகின்றன. ஏனெனில், போதிய மருந்துகள் இல்லாததே காரணமாகும். பொதுமக்கள் குறைந்தபட்சம் பாம்புகளின் இனம் மற்றும் விஷத் தன்மை கொண்டதா..?, இல்லையா..? என்பதை தெரிந்து கொள்ளும் அளவிலாவது அதனைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன்மூலம், எளிதில் சிகிச்சை அளிக்க உதவிகரமாக இருக்கும். பாம்பு கடித்தால் பயப்படுவதை முதலில் தவிர்க்க வேண்டும்," என்றார் மகேஷ்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதுகலை பயின்று வரும் மாணவன் கூறியதாவது :- இந்த நிகழ்ச்சியின் மூலம் விஷத் தன்மை கொண்ட பாம்பு இனங்களை அடையாளம் காண்பது பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும், பாம்புகள் மீதான பயமும், அதனை அடிக்கக் கூடாது என்பதையும் உணர முடிந்தது. மற்ற விலங்கினங்களைப் போலவே அவற்றையும் பாதுகாக்க வேண்டும், எனக் கூறினார்.