கோவை : சிங்காநல்லூர் ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகளை உடனடியாக முடிக்கக் கோரி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : 7 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் உள்ள கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரைவில் கட்டி முடிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூரை அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் 23 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேல்பாலம் கட்டும் பணி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியது. சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தாமல் பாலம் கட்டுமானப்பணி துவங்கியதால், உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் பாலம் கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. 7 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாலக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மேம்பாலக் கட்டும் பணி தாமதப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளதாகவும், விரைவில் பாலத்தைக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட பாலம் என்பதால், அரசு இந்த பாலம் கட்டுவதில் அக்கறை காட்டாமல் இருப்பதாகக் குற்றம்சாட்டியவர்கள், சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களை அரசு தரப்பில் அழைத்து பேசி உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 15 நாட்களுக்குள் ரயில்வே மேம்பாலம் கட்டும்பணி துவங்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரப்படுத்தப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கார்த்திக் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.