கோவை : உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடரும் என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
கோவை : உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடரும் என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தற்போது நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாநகராட்சி, கிராமங்கள் மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய குடிநீர் குழாய்களைப் பதிக்கவும், சேதமடைந்துள்ள பழைய குழாய்களை சீரமைக்கவும், கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டப் பணிகளுக்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சி மற்றும் நகரப் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் எங்கு குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறதோ, அங்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கட்டப்படும் மேம்பாலத்திற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், கரும்புக்கடை மேம்பாலத்தை ஆத்துப்பாலம் வரை நீடிக்கும் திட்டத்திற்கான வடிவமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. மற்றொருபுறம் உக்கடம் - சுங்கம் இடையிலான மேம்பாலத் திட்டமும் தயார்நிலையில் இருக்கிறது. காந்திபுரம் மேம்பாலத்தின் இருபக்கங்களிலும் நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, என்றார்.

தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "பா.ஜ.க.வுடனான உறவு சுமூகமாக உள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும்," எனக் கூறினார்.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜாதவ், கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.