கோவை : கோவையில் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி, உதவுவது போல் நடித்து 105 சவரன் நகையைக் கொள்ளையடித்த குற்றவாளிகளை மாநகர குற்றப்பிரிவு போலீசார் 30 மணி நேரத்தில் கைது செய்து, நகைகளை மீட்டனர்.
கோவை : கோவையில் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி, உதவுவது போல் நடித்து 105 சவரன் நகையைக் கொள்ளையடித்த குற்றவாளிகளை மாநகர குற்றப்பிரிவு போலீசார் 30 மணி நேரத்தில் கைது செய்து, நகைகளை மீட்டனர்.
கோவை கடைவீதி அருகே நகைப்பட்டறை நடத்தி வருபவர் சுரேஷ். இவர் தனது நகைப்பட்டறையில் பணியாற்றும் ராமமூர்த்தியிடம் வியாபார நிமித்தமாக தங்க நகைகளை தாராபுரம் கொண்டு செல்ல அனுப்பியுள்ளார். இந்த நிலையில், ராமமூர்த்தி நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணியளவில் தாராபுரம் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் ராம்நகர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, திட்டமிட்டு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ராமமூர்த்தி சென்ற பைக் மீது மோதினர். இதனால், நிலைகுலைந்த ராமமூர்த்திக்கு உதவுவது போல கொள்ளையர்கள் பல நாடகங்களை அரங்கேற்றினர். இதைத்தொடர்ந்து, கொள்ளை கும்பல் ராமமூர்த்தியை ஏமாற்றி 845 கிராம் நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் குற்றப்பிரிவு பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில், ஆய்வாளர்கள் மரியமுத்து, சிவகுமார், ரவிகுமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சாஸ்தா, இருளப்பன், ஞானபிராகாசம் ஆகியோர் அடங்கிய தனிப்படை குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். இதில், தனிப்படை போலீசார் ராமமூர்த்தி வீட்டிலிருந்து புறப்பட்ட இடத்தில் இருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இடம் வரைக்கும் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், 3 இரண்டு சக்கர வாகனங்களில் வந்த நபர்கள் விபத்தை ஏற்படுத்தி கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜா என்ற நபரை கைது செய்து விசாரணை செய்ததில், முன்னாள் ஊழியர் பத்ரிநாத் என்பவர் ராமமூர்த்தியை எப்பொழுது தாராபுரம் செல்கிறீர்கள் என கேட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, குற்றத்தில் தொடர்புடைய நான்கு பேரை நேற்று கைது செய்துள்ள போலீசார், இன்று மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும், நகைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் விரைவாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையாளர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
