கோவை : சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் முதற்கட்டமாக இன்று 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
கோவை : சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் முதற்கட்டமாக இன்று 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

உலகம் முழுவதும் சர்வதேச சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சிறுதுளி அமைப்பின் சார்பில், வெள்ளலூர் குப்பை கிடங்கில் மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, அவர் கூறியதாவது :- கோவை மாவட்டம் முன்பு சமவெளிப் பகுதியைக் கொண்ட உதகையாக இருந்தது. ஆனால், தற்போது பிற நகரங்களைப் போல தட்பவெப்ப நிலை மாறிவிட்டது. கோவையின் தட்பவெப்ப நிலை மாறுவதற்கு பல்வேறு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. எனவே, கோவையில் மீண்டும் பழைய தட்பவெப்ப நிலை திரும்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மொத்தம் 645 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் குறைந்தது 100 ஏக்கரிலாவது பசுமையை உருவாக்க வேண்டும். மாணவர்களும் சுற்றுச்சூழலை பற்றி தெரிந்து கொள்ள முன்வர வேண்டும், எனக் கூறினார்.

தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையர் ஜே. ஸ்ரவன் குமார் கூறுகையில், "கோவை மாநகரைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனும், நகரை பசுமையாக மாற்ற தங்களது சிறு பங்களிப்பை அளிக்க வேண்டும். அவரவர் வீடுகளில் கழிவு மேலாண்மையை தொடங்க வேண்டும். வீடுகளில் கழிவுகளை பிரித்தெடுக்கும் முறையை தொடங்கினால், கழிவுகளை எளிதில் அழிக்க முடியும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து கோவை மாநகரை பசுமை நகரமாக மாற்ற பாடுபடவேண்டும்," என்றார்.

சிறுதுளியைச் சேர்ந்த சுஜினி பாலு கூறுகையில், "சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறுதுளி அமைப்பு எப்போதும் கோவையை பசுமையாக மாற்ற தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும். தற்போது, முதற்கட்டமாக, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன," எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிவிரைவு படை, நம்ம கோவை, போஸ்ச் நிறுவனம், இசட்.எஃப். நிறுவனம், ஸ்ரீ கிருஷ்ணா, கேசிடி, ரத்தினம் ஆகிய கல்லூரிகளின் மாணவர்கள், கோத்ரேஜ் நிறுவனத்தினர், பப்லா கூட்டமைப்பினர், எஸ்.பி.எம். அம்பாஸிடர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.