கோவை : சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.
கோவை : சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் மாற்றங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அரசு, தனியார் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இந்நாளை அனுசரித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. பந்தய சாலை வருமான வரித்துறை அலுவலகம் அருகே அம்பாள் ஆட்டோஸ் குழுமம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அடங்கிய வாகனம் மற்றும் பேரணியை துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் பங்கேற்றவர்கள் “மரம் நடுவோம் நிழல் தருவோம்”, பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதே மண் வளத்தை கெடுக்காதே” போன்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து, அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கூறுகையில், “மக்கள் பெருக்கம், தட்பவெட்ப நிலை மாற்றம், நவீன வாழ்கை முறை ஆகிய காரணங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சி சார்பில் தனியாருடன் இணைந்து ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது, என அப்போது அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், அம்பாள் ஆட்டோ குழுமங்களின் தலைவர் அசோக் முத்துசாமி, மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.