கோவை : சூலூரில் செவிலியர் பாண்டி மீனா மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில், அவரது 3 வயது குழந்தை பேசிய வீடியோ அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை : சூலூரில் செவிலியர் பாண்டி மீனா மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில், அவரது 3 வயது குழந்தை பேசிய வீடியோ அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் கலங்கல் சாலையில் உள்ள விவேகானந்தன் கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் முரளி சங்கர் (27) மற்றும் பாண்டி மீனா (24). இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. பாண்டிமீனா பல்லடம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்த சூழலில், பாண்டி மீனாவுக்கும், அவரது கணவர் மற்றும் கணவரின் பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாண்டி மீனா மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த தனது மகளின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், ஆகவே உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பாண்டி மீனாவின் பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர்.
மேலும், பாண்டி மீனாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து, செவிலியரின் மரணம் தொடர்பாக போலீசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், கொலை வழக்காக மாற்ற வேண்டும் என பாண்டி மீனாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், செவிலியர் பாண்டி மீனாவின் 3 வயது மகள் தனது தாயின் மரணம் குறித்து பேசும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், தன்னை அஸ்மிதா என அறிமுகம் செய்து கொண்ட கள்ளமில்லா அந்தக் குழந்தை, என்னமோ பிரச்சனை ஆயிருச்சு அம்மாவுக்கு, பிரச்சனை
ஆயிருச்சு. கயிறு போட்டுட்டாங்க எனக் கூறும் போது அப்பா என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும், தாயின் மரணம் குறித்து பார்த்தீங்களா என்று சிலர் கேட்டதற்கு, பார்த்தேன் என்று குழந்தை அஸ்மிதா தெரிவித்தது. தொடர்ந்து, அந்தக் குழந்தை கூறும்போது, "என் அம்மா என்னை தங்கமே, எங்கப் போற என்று சொல்லியதாக தெரிவித்தது காண்போர் உள்ளங்களை உருக்கியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், குழந்தை பேசிய இந்த வீடியோ காட்சிகளைக் கொண்டு போலீசார் செவிலியரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்துவார்களா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.