கோவை : ரம்ஜானை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் குன்னூர் முதல் ரன்னிமேடு வரை 5 கிலோ மீட்டர் குறுகிய தூர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டது.
கோவை : ரம்ஜானை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் குன்னூர் முதல் ரன்னிமேடு வரை 5 கிலோ மீட்டர் குறுகிய தூர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டது.
ரயில்வே நிர்வாகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 7-ம் தேதி வரை குன்னூரில் இருந்து 5 நாட்கள் ரன்னிமேடு வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் மூன்று பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகிறது. இதில், முதல் வகுப்பிற்கு 56 இருக்கைகள், இரண்டாம் வகுப்பிற்கு 30 இருக்கைகளும் என மொத்தம் 86 இருக்கைகள் கொண்ட இந்த ரயில், குன்னூரில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு, சுமார் 5 கிலோ மீட்டர் வரை பயணித்து ரன்னிமேடு பகுதிக்கு சுமார் 12 மணி அளவில் வந்து அடையும். மீண்டும் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் இருந்து 1 மணியளவில் புறப்பட்டு, சுமார் 1.30 மணியளவில் குன்னூர் வந்தடையும்.

இதனிடையே, மலை குன்றுகள், நீர் அருவிகள், மலை குகைகள்,' பள்ளத்தாக்குகள், ரன்னிமேடு அருகில் உள்ள இயற்கை எழில் மிகுந்த காட்டேரி பூங்கா உள்ளிட்ட பகுதிகளை ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் வகையில், இந்தக் கால இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இரயிலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேநீர் மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்பிற்கு 450 ரூபாயும், இரண்டாம் வகுப்பிற்கு 320 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவு பொருட்கள், தேநீர் மற்றும் பூங்காவிற்கான நுழைவு கட்டணம் இதில் அடங்கும். ஏற்கனவே, சீசனுக்காக இயக்கப்பட்ட இந்த மலை ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், தற்போது மீண்டும் ரம்ஜானுக்காக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.