கோவை : கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை கைது செய்தால் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கக் கூடாது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கோவை : கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை கைது செய்தால் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கக் கூடாது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பல வருடங்களாகவே தடையின்றி சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. அதேபோல, கேரளா மாநிலத்தில் இருந்து வாங்கி வரும் இந்த லாட்டரிகளை முன்னாள் லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த லாட்டரி விற்பனை தொடர்பாக போலீசார், தமிழ்நாடு லாட்டரி ரெகுலேஷன் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதும், பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவதும் வாடிக்கையாக இருந்தது. அதேபோல, லாட்டரி விற்பனையாளர்கள் காவல் நிலைய பிணையில் எளிதாக வந்து விடுவதால் மீண்டும் மீண்டும் தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபடுகின்றனர். இப்படி தினமும் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நபர்கள் மாநகர் மற்றும் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடப்படுகின்றனர். இதில், ஒன்று அல்லது இரண்டு நபர்கள் மட்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், லாட்டரி விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க கடந்த 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தீவிர சோதனைகளை மேற்கொண்டார். இவ்வாறு நடத்திய தீவிர சோதனையில் கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 53 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், லாட்டரி விற்பனை வழக்குகளில் கைது செய்யும் நபர்களை காவல் நிலைய பிணையில் விடக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். கைது செய்யும் நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சிம்பிளிசிட்டி செய்தி குழுவுக்கு கூறியதாவது ;-நாங்கள் லாட்டரி சீட் விற்பனையை ஒழிக்கும் முயற்சியில் அதிரடியாக நடத்திய திடீர் சோதனையில் 53 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இதற்கு முன்பு கைது செய்யப்படும் நபர்கள் காவல் நிலைய பிணையில் விடப்பட்டனர். இனிவரும் காலங்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக சிறைப்படுத்தப்படுவர்.
அதேபோல, லாட்டரி விற்பனை தொடர்பான கைது நடவடிக்கைகள் ஊடகங்களில் வெளிவந்ததையடுத்து, பொதுமக்கள் சிலர் தபால் மூலம் புகார்களை அனுப்பியுள்ளனர். இப்படி அனுப்பப்பட்ட புகாரின் பேரில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி மற்றும் 3 நம்பர் லாட்டரி ஆகியவற்றை விற்பனை செய்யும் 13 பேரை எங்களது குழுவினர் திடீர் சோதனைகள் மூலம் கைது செய்வர். பொதுமக்களின் புகார்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.