கோவை : உலக புகையிலை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆராய்ச்சி மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் விழிப்புணர்வு வீடியோவை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டார்.
கோவை : உலக புகையிலை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆராய்ச்சி மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் விழிப்புணர்வு வீடியோவை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டார்.

உலக புகையிலை ஒழிப்பு தினம் வருடம்தோறும் மே 31-ல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புகையிலை பழக்கத்தால் எட்டு விநாடிக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், புகை பிடிப்பவர்கள் அருகில் புகையை சுவாசிப்பவர்களும் பாதிக்கப்படுவதாகவும் கூறும் உலக சுகாதார மையம், புகையிலை அதிகம் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்தில் இருப்பதாகவும், இந்தியா 159-வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மனித இறப்புகள் தோற்றுவிக்கும் காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் வீடியோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று வெளியிட்டார்.

இதன் பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர். குகன் பேசுகையில், "கடந்த 16 ஆண்டுகளாக புற்றுநோய் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4,000-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிய நிலையில் சிகிச்சை பெற வருகின்றனர்," எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி கூறுகையில், "உலகில் ஒரு நிமிடத்தில் 1.1 கோடி சிகரெட்டுகள் புகைக்கப்படுகிறது. தூக்கி எறியப்படும் சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. புகையிலை பழக்கத்தை ஒழிக்க ராமகிருஷ்ணா மருத்துவமனை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய குழந்தைகளுக்கு 12 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட உள்ளது," என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பேசியதாவது :- புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளதால், புகையிலை பயன்பாடு அதிகம் உள்ளது. ஒரு காலகட்டத்தில் பெண் சிசு கொலைகள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. தற்போது, பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ள விழிப்புணர்வு காரணமாக அது குறைந்து உள்ளது போல, புகையிலை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைவரும் இணைந்து உறுதி மொழி எடுக்க வேண்டும், என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், என தெரிவித்தார்.

இதபோல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும், உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.