திருப்பூர் : பல்லடம் மங்கலம் சாலையில் இரண்டு சொகுசு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உடுமலையைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஏழு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் : பல்லடம் மங்கலம் சாலையில் இரண்டு சொகுசு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உடுமலையைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஏழு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை முக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் அங்குள்ள உச்சிமாகாளியம்மன் கோவில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவியும், தமிழ்ச்செல்வி (27) என்ற மகளும், ஜெயப்பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். மகள் தமிழ்ச்செல்விக்கும் திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் காந்திநகரைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவருக்கும் திருமணமாகி எட்டு மாதங்களாகிறது. இதையடுத்து, இன்று கணவர் வீட்டில் வைத்து தமிழ்ச்செல்விக்கு வளைகாப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்து, உடுமலையிலுள்ள பெற்றோர் வீட்டிற்கு தமிழ்ச்செல்வியை அவரது பெற்றோர் மற்றும் கணவர் லோகேஷ்வரன் ஆகியோர் ஒரு காரில் அழைத்துச் சென்றனர்.
இதேபோல், சேவூர் சாவக்கட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தண்டபானி மற்றும் அவரது குடும்பத்தினர் மூன்று பேர் பல்லடத்திலிருந்து தங்களது சொந்த ஊருக்கு ஸ்கார்பியோ காரில் சென்றுள்ளனர். இந்த இரு வாகனங்களும் பல்லடம் அருகே அரசங்காடு என்ற இடத்தைக் கடந்த போது, எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின. இதில், இரு வாகனங்களிலும் பயணித்த எட்டு பேர் படுகாயமடைந்து இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களது பரிசோதனையில், நிறைமாத கர்ப்பிணிப் பெண் தமிழ்ச்செல்வி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்ற ஏழு பேருக்கும் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.