கோவை : கோவை மாநகர காவல் நிர்வாகத்திடம் குற்றவியல் நடைமுறை சட்டம் 110-ன்படி எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறியதால், பிரபல ரவுடி ஆவி வினோத் என்பவரை 313 நாட்கள் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
கோவை : கோவை மாநகர காவல் நிர்வாகத்திடம் குற்றவியல் நடைமுறை சட்டம் 110-ன்படி எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறியதால், பிரபல ரவுடி ஆவி வினோத் என்பவரை 313 நாட்கள் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
கோவை மாநகரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதேபோல, குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது. இந்த தொடர் குற்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தொடர்ந்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் குறித்த விவரங்களை சேகரித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார். இந்த அடிப்படையில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 300-க்கும் மேற்பட்டவர்களை கண்காணித்து அவர்களிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110இன்படி எழுத்துப்பூர்வமாக வாக்குறுதிகளைப் பெற்றுள்ளார். இந்த வாக்குறுதிகளை மீறும் நபர்கள் மீது ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கவும் இவருக்கு எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்ட்ரேட் என்ற அடிப்படையில் உரிமை உள்ளது.
இதன் ஒருபகுதியாக, கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆவி வினோத் என்பவரிடமும் வாக்குறுதிகள் பெறப்பட்டிருந்தது. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வெடிபொருட்கள் பயன்படுத்துதல், அடிதடி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றது. இந்த நிலையில், சமீபத்தில் ஒரு அடிதடி சம்பவத்தில் ஆவி வினோத் ஈடுபட்ட நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, காவல் நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழியை ஆவி வினோத் மீறியதால், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆவி வினோத்தை 313 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, ஆவி வினோத் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மாநகர காவல் நிர்வாகத்திடம் கொடுத்த உறுதிமொழியை ஆவி வினோத் மீறியதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் முதல் முறையாக மாநகர காவல்துறை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சமூகத்தில் அமைதி நிலவ பிரபல ரவுடியை 313 நாட்கள் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.