கோவை : இந்தி திரைத்துறையின் பிரபல பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, இளம் பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வாலிபரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை : இந்தி திரைத்துறையின் பிரபல பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, இளம் பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வாலிபரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் மகேந்திர வர்மன் (30). இவர், இந்தி திரைப்படத்துறையின் பிரபல பின்னணிப் பாடகர் அர்மான் மாலிக்கின் பெயரில் போலி முகநூல் பக்கம் மற்றும் டுவிட்டர் கணக்கு தொடங்கி, இளம் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு ஃபிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார். மேலும், அர்மான் மாலிக்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, அவற்றை தான் தொடங்கிய போலி கணக்கில் பதிவேற்றம் செய்து, தன்னை அர்மான் மாலிக் என்று அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.
இதனால், பல இளம்பெண்கள் அவரது வலையில் விழுந்துள்ளனர். மெதுவாக அப்பெண்களிடம் சமூக ஊடகங்கள் மூலமாகவே பழகி, அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை வாங்கியுள்ளார் மகேந்திரவர்மன். அந்தப் புகைப்படங்களை வைத்து அப்பெண்களை மிரட்டி, பணத்தையும் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், அவரது வலையில் சிக்கிய கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அவர் போலி என்பதை அறிந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆய்வாளர் யமுனாதேவி, உதவி ஆய்வாளர் அருண் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படை அமைத்து மகேந்திரவர்மனை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கிய தனிப்படை போலீசார், அவரை தங்கள் பாணியில் இன்று கோவைக்கு வரவழைத்துள்ளனர். பணம் வாங்குவதற்காக ஆவலுடன் கோவைக்கு இன்று காலை வந்த அவரை தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பட்டதாரி வாலிபரான மகேந்திரவர்மன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும், யாருக்கும் சந்தேகம் வராதபடி செல்போன் மற்றும் தனது டேப் மூலமாக பெண்களை தொடர்பு கொண்டு இணையம் மூலமாகவே பணம் பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அவரது செல்போன் மற்றும் டேப் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.