கோவை : தடாகம் அருகே சட்டவிரோதமாக பட்டப்பகலில் மணல் கொள்ளை சம்பவம் அரங்கேறி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : தடாகம் அருகே சட்டவிரோதமாக பட்டப்பகலில் மணல் கொள்ளை சம்பவம் அரங்கேறி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடாகம் அருகே உள்ள மலையடிவாரத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோவை மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து, அடுக்கடுக்கான புகார் மனுக்களை அளித்து வருகின்றனர். இதையடுத்து, மணல் கொள்ளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறையினரும் மேற்கொண்டனர். இந்த நிலையில், தடாகம் பகுதியில் உள்ள மாங்கரை - வீரபாண்டி செல்லும் சாலையில் பட்டப்பகலில் மணல் கடத்திச் செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் லாரிகளில் மணல் நிரப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மலையடிவாரப் பகுதிகளில் 3 அடிக்கு மட்டுமே மணல் எடுக்க செங்கல் சூளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 50 அடிக்கும் அதிகமாக பள்ளம் தோண்டப்பட்ட மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதாக சின்னத்தம்பி மற்றும் விநாயகன் ஆகிய காட்டு யானைகள் பிடித்து இடமாற்றம் செய்யப்பட்ட போது, இனி மணல் கொள்ளை அதிகரித்து சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்களும், அறிவியலறிஞர்களும் கூறியிருந்தனர். அவர்களின் கூற்று உண்மை என்பதற்கு, தற்போதைய மணல் கொள்ளை சம்பவங்களே சாட்சியாகும்.
அதுமட்டுமில்லாமல், யானைகள் அனுபவ வல்லுநர் அஜய் தேசாய், கடந்த டிசம்பர் மாதம் வனத்துறையினருக்கு அளித்துள்ள அறிக்கையில், மணல் கொள்ளை சம்பவங்களே, மனித - யானைகள் மோதலுக்கு வழிவகுப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

நீர்நிலைகள் பாதிப்பிற்கு இதுபோன்ற மணல் கொள்ளை சம்பவங்களே முக்கிய காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில், பெரிய தடாகம் பகுதியில் மணல் கொள்ளைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாதை அடைக்கப்பட்டது. மணல் கொள்ளை குறித்து புகார்கள் வரும் போது, பாதையை அடைக்க மட்டுமே முடிந்த கோவை மாவட்ட நிர்வாகத்தினால், மணல் கொள்ளையைத் தடுக்க முடியவில்லை என்பது அனைவரிடத்திலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.