நீலகிரி : உதகையில் நடந்த 123-வது மலர்கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவுக்கு, வேளாண்மைத்தறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தார்.
நீலகிரி : உதகையில் நடந்த 123-வது மலர்கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவுக்கு, வேளாண்மைத்தறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் சுப்பையன் வரவேற்றார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மலர் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:- உதகை மலர்க்கண்காட்சி இயற்கை எழிலை பறைசாட்டுகிறது. தோட்டக்கலை சங்கம் மூலம் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. கடந்த 1980-ம் ஆண்டு முதல் அரசால் ஏற்பாடு செய்யப்படுகிறது. 1896-ம் ஆண்டு முதல் கண்காட்சி நடத்தப்பட்டது. உதகை தாவரவியல் பூங்காவில் 127 வகையான பெரணிகள், தமிழக மற்றும் இந்திய அரசு லட்சணைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பல வண்ண மலர்கள் உள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 200 பூங்காக்கள் போட்டிகளில் பங்கேற்று, சிறந்து பூங்கா தேர்வு செய்யப்படுகிறது.

தோட்டக்கலைத்துறையில் தமிழகம் இந்தியாவின் முன்னோடியாக திகழ்கிறது. தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தரமான விதை மற்றும் இடு பொருட்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். மாநில அரசு இடு பொருட்களை மானியத்துடன் வழங்குகிறது. விவசாயத்தில் முக்கியமான நீர் மேலாண்மை, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதற்கு நுண்நீர் பாசனம் கைக்கொடுக்கிறது. நுண்நீர் பாசன கருவிகளை தமிழக அரசு 100 சதவீத மானியத்தில் வழங்குகிறது. தமிழகம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்குகிறது.

தேசிய தோட்டக்கலை ஆணையம் மூலம் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை மேம்படுத்த ரூ. 175 கோடி ஒதுக்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் தோட்டக்கலை ஆணையம் மூலம் கொய்மலர் மையம் ரூ. 8.80 கோடியில் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் விவசாயிகளுக்கு மலர் சாகுபடியில் நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம், நாட்டின் மலர் சாகுடியில் தமிழகம் 19% பூர்த்தி செய்து, நாட்டின் முன்னோடியாக திகழ்கிறது.
இதேபோல, மலை காய்கறிகளுக்கான மையம் நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு கிராமத்தில் அமைக்கப்படவுள்ளது. மலர்கள் குறித்து சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதகை மலர்க் கண்காட்சி சர்வதேச புகழ் பெற்றுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் மலர் சாகுபடியாளர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில், பிற மாவட்டங்களிலும் வரும் காலங்களில் போட்டி நடத்தி, மலர்க் கண்காட்சியின் போது பரிசுகள் வழங்கலாம், என்றார்.
இக்கண்காட்சியின் முக்கிய அம்சமான சிறந்த பூங்காவுக்கான ஆளுநர் கோப்பை வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி மையம் தட்டி சென்றது. காட்சியின் சிறந்த மலருக்கான தமிழக முதலமைச்சரின் தங்க கோப்பை ‘பேன்சி’ மலர் தேர்வு செய்யப்பட்டது. இந்த மலரை வளர்த்த உதகையை சேர்ந்த பி.கிஷோருக்கு முதலமைச்சர் தங்க கோப்பை வழங்கப்பட்டது. மலர் கண்காட்சியை முன்னிட்டு 62 சுழற்கோப்பைகள் உட்பட போட்டியில் பங்கேற்ற 255 பூங்காக்களுக்கு, 203 காட்சி நாள் போட்டியாளர்கள் மற்றும் இதர பரிசுகள் வழங்கப்பட்டன. தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் நன்றி கூறினார். விழாவில், மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.