கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை 55 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை 55 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் காலமானார். இதையடுத்து, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளுடன் மே மாதம் 19-ம் தேதி, காலியாக உள்ள சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22-ம் தேதி முதல் இன்று வரை பெறப்பட்டன. 6 நாட்கள் நடந்த வேட்புமனு தாக்கலில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜின் சகோதரர் வி.பி. கந்தசாமி இன்று அமைச்சர் வேலுமணியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் சுகுமார் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "சூலூரில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 4 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்," என நம்பிக்கை தெரிவித்தார்.
இதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஜி. மயில்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசை வலியுறுத்தும் வகையில் செயல்பட உள்ளேன். சூலூரில் விவசாய கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
மேலும், 10 ரூபாய் சில்லறை காசுகளை பானையில் எடுத்து வந்த சுயேட்சை வேட்பாளர் பழனிச்சாமி என்பவர், 2 ஆண்டுகளில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பதவி விலகுவேன் என பத்திரத்துடன் வந்திருந்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மட்டும், 31 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வாபஸ் பெற கடைசி நாள் மே 2-ம் தேதியாகும்.