தேர்தல் சின்னம் வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார்.
தேர்தல் சின்னம் வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார்.
அ.தி.மு.க.வில் ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அ.ம.மு.க. என்ற இயக்கத்தை தொடங்கினார். அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் சுயேட்சையாகவே போட்டியிட்டனர். அக்கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால், அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். எனினும், உச்சநீதிமன்றம் சென்று பரிசுப்பெட்டி சின்னத்தை டிடிவி தினகரன் பொதுச்சின்னமாக பெற்றார்.
இந்த நிலையில், அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார். இன்று நடந்து வரும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தை அடுத்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.