கோவை : கோவையில் அ.தி.மு.க.,வினருக்கும் பா.ஜ.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட பழைய மோதல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது புதிய காட்சி போல வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
கோவை : கோவையில் அ.தி.மு.க.,வினருக்கும் பா.ஜ.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட பழைய மோதல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது புதிய காட்சி போல வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
கோவை ரங்கே கவுடர் வீதி அருகே பிரச்சாரத்தின் போது ஒரே கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.,விற்கும் பா.ஜ.க.விற்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்புகள் ஏற்பட்டது போன்ற காட்சிகள் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சியில் பா.ஜ.க பொறுப்பாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் உடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளும் உள்ளது. அதேபோல, அ.தி.மு.க.வினர் வானதி சீனிவாசனை முற்றுகையிட்டதுடன், அவரது உதவியாளரின் காரை தாக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
மேலும், இதை அறிந்து வந்த பா.ஜ.க.,வினர் மற்றும் இந்து முன்னணியினர் அ.தி.மு.க.,வினரிடம் வாக்குவாதத்தில் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது போன்ற காட்சிகளும் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அதோடு, அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வினரை கண்டித்து ஊர்வலம் சென்றதாகவும் பரவி வருகிறது.
அ.தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் தற்போது ஒரே கூட்டணியில் இருக்கும் பட்சத்தில், இருவருக்கும் இடையே கைகலப்பு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது போன்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருவது இரு கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளாக இருக்கும் பொழுது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், லேசான கைகலப்பும் ஏற்பட்டது. இதை அறிந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை ஏற்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். இது 2016ஆம் ஆண்டு நடந்த சம்பவம். ஆனால், தற்போது சமூகவலைதளத்தில் சிலர் வேண்டுமென்றே கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது போன்ற காட்சிகளை பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து பா.ஜ.க. வட்டாரத்தினர், இந்த வீடியோ காட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பழைய வீடியோ காட்சிகளை தற்போது தேர்தலில் கூட்டணியில் இருக்கும் பொழுது சமூகவலைதளத்தில் பரப்புவது கண்டனத்துக்கு உரியது எனவும் தெரிவித்துள்ளனர்.