கோவை : தமிழக நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட வடசென்னை தொகுதிக்குப் பதிலாக, இந்த முறை நீலகிரியில் போட்டியிட பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், நீலகிரியில் புதுமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்யவும் பா.ஜ.க. திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கோவை : தமிழக நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட வடசென்னை தொகுதிக்குப் பதிலாக, இந்த முறை நீலகிரியில் போட்டியிட பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், நீலகிரியில் புதுமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்யவும் பா.ஜ.க. திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள கட்சிகளுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டாலும், தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையவில்லை. குறிப்பாக, மாபெரும் கூட்டணியாகக் கருதப்படும் ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.விற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது பெரும்பாலான இடங்களை எதிர்பார்த்திருந்த பா.ஜ.க. மூத்த தலைவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதனிடையே, தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய தேசிய கட்சிகளுக்கு போதிய பலம் இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 5 இடங்களுக்கு மேல் ஒதுக்கியிருக்கியிருப்பது பயனற்றது என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். இதனிடையே, தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்னும் ஒருசில தினங்களில் அரசியல் கட்சிகள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரியில் 'தாமரை' மலருமா..?
இந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் பா.ஜ.க., போட்டியிடவில்லை என்றும், இதற்கு பதிலாக, நீலகிரியில் போட்டியிடுவது பற்றியும் பரிசீலனை நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், சிவகங்கையில் தொகுதியில் எச். ராஜாவும், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜனும், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணனும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, பா.ஜ.க.வின் 4-வது தொகுதியாகக் கருதப்படும் கோவையில் வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் நிலவுகிறது. இந்த வேட்பாளர் போட்டியில் மூத்த அரசியல்வாதி சி.பி. ராதாகிருஷ்ணன், புது முகமான பேராசிரியர் கனகசபாபதி மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் இருக்கின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க., தேர்வு செய்யவிருக்கும் தனது 5-வது தொகுதியான நீலகிரி, தாழ்த்தப்பட்டோருக்கான (எஸ்.சி) தொகுதியாகும். இந்தத் தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தி.மு.க.வின் ஆ. ராசா 44.64 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வின் சி. கோபாலகிருஷ்ணன் உள்பட மற்ற வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர்..
எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்கள் :
வேலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற டி. கங்கப்பாவை நீலகிரி தொகுதி வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணியில் இருந்து விலகிய கங்கப்பா, 1984-ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். பின்னர், 1984-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட கங்கப்பா, அ.தி.மு.க.,வின் ஏ.சி. சண்முகம், தி.மு.க.,வின் ஏ.எம். ராமல் ஆகியோருக்கு அடுத்தபடியாக, 3-வது இடத்தைப் பிடித்தார். இதைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் சிக்கோடி தொகுதியிலும், 1994-ம் ஆண்டு நடந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மதுஹிரி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

79 வயதுடைய ஓய்வுபெற்ற ஆட்சியர் டி. கங்கப்பா, படுகர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவிற்கு மிகவும் சவாலாக இருப்பார் என்றே கருதப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகனையும் பா.ஜ.க. பரிசீலனை செய்து வருகிறது. 42 வயதுடைய வழக்கறிஞர் முருகன் 2011-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில், ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அதில், அ.தி.மு.க.வின் பி. தனபால், தி.மு.க.வின் துரைசாமி ஆகியோருக்கு அடுத்தபடியாக, 3-வது இடத்தைப் பிடித்தார்.

இன்னும் ஒருசில தினங்களில் வேட்பாளர்களை பா.ஜ.க அறிவிக்கும் போது, அக்கட்சியின் தொகுதிப் பட்டியலில் நீலகிரியும் இடம்பெற்றிருப்பது பெரும்பாலானோருக்கு ஆச்சரியமூட்டும் என்பதில் சந்தேகமில்லை.