கோவை : 17 வது மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே, நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. அடிக்கும் வெயிலுக்கு ஏற்ப, அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களும், பரபரப்புகளும் தேர்தல் களத்தில் சூட்டை கிளப்பி கொண்டிருக்கின்றன. எந்த பக்கம் திரும்பினாலும் அரசியல் பேச்சு தான். இரண்டு பேர் சேர்ந்தால் கூட அரசியலை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
கோவை : 17 வது மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே, நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. அடிக்கும் வெயிலுக்கு ஏற்ப, அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களும், பரபரப்புகளும் தேர்தல் களத்தில் சூட்டை கிளப்பி கொண்டிருக்கின்றன. எந்த பக்கம் திரும்பினாலும் அரசியல் பேச்சு தான். இரண்டு பேர் சேர்ந்தால் கூட அரசியலை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் கூட்டணி என்பது கிட்டதட்ட உறுதியாகி விட்ட நிலையில், யார் யாரோடு சேர்வார்கள் என்ற விவாதம் நிறைவு பெற்றுள்ளது. இப்போது இந்த தொகுதியில் எந்த கட்சி போட்டியிடும்..? யார் யார் வேட்பாளர் என்பது குறித்த விவதாங்கள் எழுந்துள்ளன.
ஆளுமை போட்டி ;
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மோடி அலை, காங்கிரஸ் எதிர்ப்பலை ஆகியவற்றினால், கடந்த முறை மத்தியில் பா.ஜ.க. அரசு அமைத்தது. ஆனால், இந்த தேர்தல் களத்தில் மோடி அலை வெகுவாக ஓய்ந்துள்ளது. பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒரணியில் திரண்டு நிற்கின்றன. இவற்றை மீறி வெற்றி பெற்று பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதேசமயம், காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. இதில், பா.ஜ.க.வை வீழ்த்தி தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ராகுல்காந்திக்கு உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் முக்கிய ஆளுமைகளாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல் களம் இது. தொடர் தோல்விகள், கருணாநிதி மறைவு ஆகியவற்றில் இருந்து மீண்டு ஸ்டாலின் தன் ஆளுமையை நிரூபிக்க முயற்சித்து வருகிறார். அ.தி.மு.க.வில் யார் ஆளுமை என்ற போட்டியில் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோருக்கு இடையே நிலவுகிறது. ஆக, நடைபெற இருப்பது ஆளுமை போட்டி!.
அதற்கேற்ப கடந்த தேர்தல்களை போல் இல்லாமல் கூட்டணி கட்சிகளை சேர்ப்பதில் முக்கிய கட்சிகள் அதிக ஆர்வம் காட்டின. இதற்கு பலம் வாய்ந்த கூட்டணியாகவும், வெற்றியை உறுதி செய்ய எந்த வாக்குகளை சிதற விடக்கூடாது என்ற கணக்குமே காரணம். ஆனால், தமிழக தேர்தல் கணக்கு வேறு.
நாடாளுமன்றத்தை விட, ஆட்சியை தீர்மானிக்கும் 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களே இலக்கு.
கோவையில் போட்டியிடும் கட்சிகள் எவை..?
தமிழகம் முழுக்க தொகுதி பங்கீடு செய்வதிலும், வேட்பாளரை தேர்வு செய்வதிலும் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. நம்ம ஊரு கோவையில் போட்டியிடும் கட்சிகள் எவை..?. யாரை எதிர்த்து யார் போட்டியிடுவது..?
அ.தி.மு.க. கூட்டணியில் யார்..?
அ.தி.மு.க. கூட்டணியில் கோவை தொகுதியில் போட்டியிடும் வலிமை அ.தி.மு.க., பா.ஜ.க.விற்கு மட்டுமே இருக்கிறது.
கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்றாலும், கோயமுத்தூர் மக்களவை தொகுதியை கூட்டணியில் உள்ள தேசிய கட்சிகளுக்கு ஒதுக்குவதே வழக்கம். அது இந்த முறையும் தொடரும்.
பா.ஜ.க.விற்கு கோவை என்பது விருப்பமான தொகுதி. ஏற்கனவே, இரண்டு முறை வென்ற தொகுதி. நல்ல வாக்கு வங்கியுள்ள தொகுதி. வலுவான கூட்டணி அமைந்திருப்பதால், இம்முறை எப்படியும் வெற்றி வசப்படும் என பா.ஜ.க. நினைக்கிறது. தொகுதி உறுதியாகி விட்ட நிலையில், வேட்பாளர் தேர்வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலில் பலர் இருந்தாலும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும், வானதி சீனிவாசனுக்கும் இடையே தான் போட்டி. அப்படியிருக்க, பா.ஜ.க., தரப்பில் இருந்து இந்த முறை 3-வது புதுமுக வேட்பாளராக கனகசபாபதி என்ற பொருளாதார பேராசிரியரின் பெயரும் அடிபட்டுள்ளது. அதுவும், ஆடிட்டர் குருமூர்த்தியின் மூலம் அமித்ஷா போன்ற மேல்மட்ட தலைவர்களிடம் கனகசபாபதியின் பெயர் நேரடியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, பா.ஜ.க., சார்பில் யார் வேட்பாளராக கோவையில் முன்நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே, இரண்டு முறை எம்.பி.யாக கோவை தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், கடந்த தேர்தலில் போட்டியிட்ட போது, உட்கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதற்கேற்ப, சி.பி.ராதாகிருஷ்ணன் தோல்விக்கு உட்கட்சி பூசலே காரணமென சொல்லப்பட்டது. கடந்த சில வருடங்களாக கோவையில் கட்சி பணிகளாட்டும், பொதுப்பணிகளாட்டும் சி.பி.ராதாகிருஷ்ணனின் பங்களிப்பு குறைவு என்பது கோவை பா.ஜ.க.வினரின் கருத்து. மீண்டும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டால், அதே சிக்கல் மீண்டும் வரக்கூடும்.
பா.ஜ.க. பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனுக்கே வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
2014-க்கு பிறகு கோவையில் செயல்பாடுகளை வானதி அதிகப்படுத்தியுள்ளார். மக்கள் சேவை மையம் என்ற பெயரில் வேலைவாய்ப்பு, முத்ரா, ஆவஸ் யோஜனா உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெறும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் உதவி செய்தல், மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் தயார்படுத்தல், மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். கட்சியினர், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களிடம் ‘குட் ஒப்பியனின்’ இருக்கும் வானதிக்கு சீட் கொடுக்க வாய்ப்புண்டு.
வாக்கு வங்கி, மோடி ஆதரவு, தொழிலதிபர்கள் ஆதரவு, சாதி ஓட்டுகள் உள்ளிட்டவை பா.ஜ.க.விற்கு சாதகமாக இருக்கும். அ.தி.மு.க. பிளவு, உள்ளடி வேலை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட தொழில் பாதிப்புகள், ஆளுங்கட்சி அதிருப்தி, சிறுபான்மை வாக்கு இழப்பு, அரசு ஊழியர்கள் வாக்கு மற்றும் உயர்மின்னழுத்த கோபுரத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகள் வாக்குகள் இழப்பு ஆகியவை பாதகமாக இருக்கும்.
தி.மு.க. கூட்டணியில் யார்?
அ.தி.மு.க. கூட்டணியில் கோவை தொகுதி பா.ஜ.க.விற்கு உறுதியாகி விட்ட நிலையில், தி.மு.க. கூட்டணியில் இத்தொகுதியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கோவை தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 4 முறையும், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தலா இரண்டு முறை வென்றுள்ளன.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், 2009 தேர்தலில் ஒரு இலட்சத்து 28 ஆயிரம் வாக்குகளுடன் 3-வது இடம் பிடித்துள்ளார். இந்த கட்சிகளும்கோவை தொகுதியில் போட்டியிட விரும்புகின்றன.
காங்கிரஸ் கட்சியின் விருப்பப் பட்டியலில் கோவை இடம் பெற்றிருந்தாலும், தொகுதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு குறைவு தான். ஒருவேளை ஒதுக்கப்பட்டால், அக்கட்சியின் மாநில செயல் தலைவரான மயூரா ஜெயக்குமார், நீலகிரி தொகுதி முன்னாள் எம்.பி.பிரபு ஆகியோரை வேட்பாளராக பரீசிலிக்க வாய்ப்புண்டு. அதேசமயம், கொ.ம.தே.க. ஈஸ்வரனுக்கு பொள்ளாச்சி அல்லது நாமக்கல் ஒதுக்கப்படலாம் என்பதால் கோவையில் கொடுக்க வாய்ப்பில்லை.
அதேசமயம், தி.மு.க. போட்டியிடுவதற்கான வாய்ப்பு குறைவு. என்றாலும், கோவையில் போட்டியிட தி.மு.க. விரும்புகிறது. தி.மு.க. போட்டியிட்டால் பொங்கலூர் பழனிசாமிக்கே அதிக வாய்ப்பு என்கின்றனர், தி.மு.க.வினர். இல்லையெனில் அவரது மருமகன் கோகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
இரண்டு இடதுசாரி கட்சிகள் தி.மு.க.விடம் அளித்த விருப்பத் தொகுதியில் பட்டியலில் கோவை இடம் பெற்றுள்ளது. தொழிற்சங்கங்களும், கணிசமான வாக்கு வங்கியும் இருப்பதால், இரு கட்சிகளுக்கும் கோவையில் போட்டியிட விரும்புகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டால், அக்கட்சியின் துணை செயலாளர் கே.சுப்பராயன் வேட்பாளராவது உறுதி. ஏற்கனவே, 2004-ம் ஆண்டு கோவை தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், இந்த தேர்தலில் கோவையை எப்படியும் கேட்டு பெற வேண்டுமென்ற முனைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. வேட்பாளர் பட்டியலில் பி.ஆர்.நடராசன், சி.பத்மநாபன், ராமமூர்த்தி ஆகியோர் உள்ளனர். இருப்பினும், ஏற்கனவே 2009 தேர்தலில் வென்ற பி.ஆர்.நடராசனுக்கே அதிக வாய்ப்புண்டு.
இக்கட்சிக்கு திருப்பூர் ஒதுக்கப்பட்டால், கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பில்லை.
மோடி எதிர்ப்பு, கூட்டணி பலம், தொழிற்சங்க வாக்குகள், சிறுபான்மையினர் மற்றும் அரசு ஊழியர்கள் வாக்குகள், ஆளுங்கட்சி அதிருப்தி, அ.தி.மு.க. பிளவு ஆகியவை இக்கூட்டணிக்கு பலம். உட்கட்சி பூசல், மாவட்ட அளவில் சரியான தலைமையின்மை, மக்கள் தொடர்பு குறைவு, சாதி ஒட்டுக்கள், தொழிற்சங்கள் பலமிழப்பு உள்ளிட்டவை பலவீனம்.
களமிறங்கும் அ.ம.மு.க.
அ.தி.மு.க. வாக்குகளை பிரிக்கவும், பா.ஜ.க. – அதிமுக கூட்டணி வெறுப்பை அறுவடை செய்யவும், களத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தயாராக உள்ளது. எஸ்.டி.பி.ஐ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகள் இக்கூட்டணியில் இருந்தாலும், கோவையில் போட்டியிட வாய்ப்பில்லை. அ.ம.மு.க. நேரடியாக களமிறங்க உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரையின் மகன் செந்தில் குமார் அல்லது, முன்னாள் ஆவின் சேர்மன் வி.என். அப்பாதுரை ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்படுவார்கள்.
மற்ற கட்சிகள் சார்பிலும், சுயேட்சையாகவும் போட்டியிட பலர் தயாராகி வருகின்றனர். இவர்களால் கணிசமான வாக்குகளை பிரிக்க முடியுமே தவிர, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
கோவை மக்களவை தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். அதேசமயம், குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்று, தனது இருப்பை பதிவு செய்யும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வும், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட அதிக வாய்ப்புகள் உண்டு.
கோவையில் போட்டியிடும் கட்சி மற்றும் வேட்பாளர்கள் குறித்தான புதிர்களுக்கு, இன்னும் ஒரிரு நாளில் பதில்கள் கிடைத்து விடும். காத்திருப்போம்…!