கோவை : சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையிலிருந்து தென் மாவட்டங்களான மதுரை தேனி, கம்பம், திருச்சி, தஞ்சை போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முக்கிய பேருந்து நிலையமாக உள்ளது. இதில், வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படும். விடுமுறை காலங்களில் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால், சிறப்பு பேருந்துகளும் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சிவராத்திரி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 9 மணி முதலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் குவியத் துவங்கினர். குழந்தைகளுடன் பெண்களும் பல மணி நேரம் பேருந்திற்காக காத்திருந்தனர்.
கூட்டத்திற்கு தகுந்தாற்போல் பேருந்து வசதிகள் இல்லாதத்தால் பயணிகள் சிரமடைந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பாக 500-க்கும் மேற்பட்டோர் சாலையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் அவர்கள் கலைய மறுத்தனர்.
இதனால், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை அங்கு வரவழைத்த போலீசார், பேருந்திற்காக காத்திருந்த பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தனர். பின்னர், கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதனிடையே, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் இல்லாமல், தேனிக்கு 14 பேருந்துகளும், திருச்சிக்கு 18 பேருந்துகளும், மதுரைக்கு 26 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளதாகவும், அதிகளவிலான பயணிகள் காரணமாக பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போராட்டம் காரணமாக சிங்காநல்லூர் பகுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு நிலவியது.