கோவை : கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு வார்டுகள் இரு வெவ்வேறு சட்டமன்ற தொகுதிகளின் கீழ் வருவதால், அடிப்படை வசதிகளுக்காக அலைக்கழிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை : கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு வார்டுகள் இரு வெவ்வேறு சட்டமன்ற தொகுதிகளின் கீழ் வருவதால், அடிப்படை வசதிகளுக்காக அலைக்கழிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை மாநகராட்சியின் கீழ் 100 வார்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், உக்கடத்தை அடுத்த கரும்புக்கடை பகுதியில் மட்டும் 2 வார்டுகள் உள்ளன. இந்த இரண்டு வார்டுகளும், தொண்டாமுத்தூர் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் தனிதனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வார்டுகள் இரு வெவ்வேறு சட்டமன்ற தொகுதிகளின் கீழ் வருவதால், அடிப்படை வசதிகளின்றி அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த இரு மாதங்களாக சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை இதுவரை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் தொகுதி அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கட்டுப்பட்டது. சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வின் நா. கார்த்திக் உள்ளார். இந்த இரண்டு வார்டுகளும் இரு வெவ்வேறு சட்டமன்ற தொகுதிகளின் கீழ் வருவதால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி, மாறி இது எங்கள் தொகுதிக்குட்பட்டது கிடையாது எனக் கூறி விடுகின்றனர். இதனால், தங்களது வார்டுக்கான பொறுப்பாளர்கள் யார்...?, தங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமை எவரிடம் உள்ளத் என்பது அறியாது இரு வார்டுகளில் மக்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
“கோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அதிக மக்கள் தொகையைக் கொண்டது கரும்புக்கடை. எங்களது பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. கோவை அரசு மருத்துவமனை அருகில் இருப்பதால், அதிக மக்கள் தொகை இருக்கும் எங்கள் பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லை. மேலும், பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், கரும்புக்கடைக்கு தற்போது பேருந்து வசதியும் கிடையாது. நகர் பகுதிக்கு செல்வது பெரிதும் சிரமமாக உள்ளது.
50,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட இந்தப் பகுதியில் எந்தவொரு வங்கியும் இல்லை. கரும்புக்கடை மெயின் ரோட்டில் வங்கிக்காக இடம் ஒதுக்கி தருவதாகக் கூறியும் எந்தவொரு வங்கியும் தங்களது கிளையை இங்கு திறக்க முன்வரவில்லை. வங்கிக்காக, இங்குள்ள மக்கள் போத்தனூர் அல்லது குனியமுத்தூருக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும், இங்குள்ள பள்ளிகளில் 5,000 குழந்தைகள் பயின்று வரும் நிலையில், பூங்கா வசதியோ, விளையாட்டு மைதானமோ கூட கிடையாது. அதேபோல, சாலைகளும் மோசமான நிலையில் உள்ளது,” என்கிறார் அப்பகுதியை சேர்ந்த அப்துல் ஹக்கிம்.

அப்பகுதியைச் சேர்ந்த பீர் முகமது கூறுகையில், “கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு வார்டுகள் இரு வெவ்வேறு சட்டமன்ற தொகுதிகளின் கீழ் வருவதால்தான், அடிப்படை வசதிகள் கூட இலக்க நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்,” என்றார்.
சிறுபான்மையின மக்கள் அதிகம் உள்ள எங்களது பகுதியில், எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து தர யாரும் முன் வரவில்லை. இதே நிலை நீடித்தால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என் புதிய கோவை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜே. ஸ்ரவன் குமார் உறுதியளித்துள்ளார்.