கோவை : இயற்கை பேரிடர் காலங்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபட்டதற்காக மாநில அரசுகள் விமானப்படைக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் நிலுவைத்தொகை வைத்துள்ளதாக விமானப்படையின் தென் மண்டல ஏர் கமாண்டர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை : இயற்கை பேரிடர் காலங்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபட்டதற்காக மாநில அரசுகள் விமானப்படைக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் நிலுவைத்தொகை வைத்துள்ளதாக விமானப்படையின் தென் மண்டல ஏர் கமாண்டர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரம் குடியரசு தலைவரின் கலர்ஸ் பிரசெண்டேசன் விருதாகும். இவ்வாண்டு கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இயங்கி வரும் 5 பேஸ் ரிப்பேர் டிப்போ மற்றும் கர்நாடகாவின் ஹக்கிம்பெட் விமான தளங்களுக்கு இந்த விருது அளிக்கப்பட உள்ளது. இதற்கான விழா வருகிற 4 ம் தேதி சூலூர் விமானப்படைத் தளத்தில் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று சூலூர் விமானப் படை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய விமானப்படையின் தென் மண்டல ஏர் கமாண்டர் பி.சுரேஷ் கூறுகையில், "சிறந்த பழுது பார்க்கும் சேவை வழங்கியதற்காக சூலூர் விமானப் படைத் தளத்தின் பிரிவிற்கும், சிறந்த விமானிகள் பயிற்சி அளித்ததற்காக ஹக்கிம்பெட் பிரிவிற்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
கோவை மண்டலத்தில் டிபென்ஸ் காரிடார் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு தேவையான உதிரிப்பாகங்கள் கிடைப்பது அதிகரிக்கும். இதன் மூலம் தொழில் வளம் பெருகும். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் பாதுகாப்பு பிரிவில் விமானப்படை முன்னணியில் இருக்கிறது. தற்போது, 7 பெண் விமானிகள் போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு பெண் அதிகாரிக்கும் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் தென் மண்டல பிரிவு, ஒட்டுமொத்த இந்தியபெருங்கடல் பகுதியையும் விரைவாகச் சென்று அடையக்கூடிய வகையில் உருவாகி வருகிறது. இதனைக் கடந்த ஆண்டு நடைபெற்ற ககன் சக்தி பயிற்சி வெளிப்படுத்தி உள்ளது. எந்த விதமாகச் சூழலையும் சமாளிக்கும் திறன் விமானப்படைக்கு உள்ளது. பேரிடர் காலங்களின் போது மீட்பு பணியில் ஈடுபடும் விமானப்படைகளுக்கு ஆகும் செலவினங்கள் தொடர்பாக கட்டணக்குறிப்புகள் மாநில அரசுகளுக்கு அனுப்புவது நிர்வாக செயல்பாடு. அதனைக் கட்டாயம் பெறுவது என்ற நிலைப்பாடு இல்லை.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான நடைமுறை விவகாரம் இது. கேரள அரசுக்கு அனுப்பப்பட்ட கட்டண குறிப்புகள் போலவே, பந்திப்பூரில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 13 முறை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதற்கும், கட்டண குறிப்புகள் கர்நாடக அரசுக்கு அனுப்பப்படும். விமானப்படைக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் நிலுவைத்தொகை இருக்கிறது.
இதனை சர்ச்சையாகப் பார்க்கத் தேவையில்லை. பதான்கோட் தாக்குதலுக்குப் பிறகு விமானப்படை தளங்களைப் பாதுகாக்க மனித மற்றும் மின்னணு முறைகளை ஒருங்கிணைத்த பாதுகாப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்பான செயல்பாட்டை தேஜஸ் இலகு ரக விமானம் அளித்து வருவதை, ஒரு விமானியாக நான் பாராட்டுகிறேன். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு 213 தேஜஸ் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்படும்.
இந்த சந்திப்பின் போது சூலூர் விமானப்படை தளத்தின் ஏர் கமாண்டர் புத்தம்பெக்கர், ஹக்கிம்பெட் விமானப்படை தளத்தின் ஏர் கமாண்டர் ஓபராய், 5 சுலூர் பேஸ் ரிப்பேர் டிப்போவின் ஏர் கமாண்டர் அதுல் கார்க் மற்றும் விமானப்படை அதிகாரிகள் உடனிருந்தனர். 4ம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சியின் போது, சாரங்க் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானப்படையின் பாராடுரூப்பர்களின் நேரடி சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.