கோவை : கோவையை அடிப்படையாகக் கொண்ட வில்பிரஷ் லேமேன் அக்ரோ வெஞ்சர்ஸ் நிறுவனத்திற்கு, நேடிவ் ஏஞ்சல்ஸ் நெட்வொர்க் மற்றும் உபயா சோசியல் வெஞ்சர்ஸ், சங்கம் வெஞ்சர்ஸ் ஆகியவை இணைந்து ரூ.1.1 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
கோவை : கோவையை அடிப்படையாகக் கொண்ட வில்பிரஷ் லேமேன் அக்ரோ வெஞ்சர்ஸ் நிறுவனத்திற்கு, நேடிவ் ஏஞ்சல்ஸ் நெட்வொர்க் மற்றும் உபயா சோசியல் வெஞ்சர்ஸ், சங்கம் வெஞ்சர்ஸ் ஆகியவை இணைந்து ரூ.1.1 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
செல்வகுமார் வரதராஜன் என்பவரால் ஜூலை 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது வில்பிரஷ் லேமேன் அக்ரோ வெஞ்சர்ஸ் நிறுவனம். செல்வகுமாரின் மனைவி சர்மிளா துரைராஜன் இருவருக்கும் பிறந்த குழந்தைக்குத் தரமான பால் கொடுக்கும் முயற்சியில் தொடங்கியது தான் இந்த பால் நிறுவனம். கோவையில், முழுக்க ஆராய்ந்து பார்த்த போதும், அவர்களது மகளுக்கு தரமான பாலை பெற முடிவில்லை. இதுதான் புதியதாக இந்நிறுவனத்தைத் தொடங்க இருந்த வித்து.

தம்பதியினர் இருவரும் கிராம வாழ்க்கையை அதிகம் விரும்புபவர்கள். அந்த வாழ்வியல், உணவு முறைகள், எத்தனை முயன்றாலும் நகரங்களில் கிடைப்பதில்லை. இது பற்றி செல்வகுமார் கூறும் போது, விவசாயிகள் தங்களுடைய உற்பத்திக்கு சரியான விலை கிடைப்பதில்லை, மேலும், தரமான உற்பத்தி பொருட்கள் இருக்கிற நிலையிலும், தேவையிருப்பவர்களுக்கு போய் சேருவதில்லை, என்கிறார்.
இதனைக் கருத்தில் கொண்டு செயல்பட வில்பிரஷ் லேமேன் அக்ரோ வெஞ்சர்ஸ் நிறுவனம் இயங்கத் தொடங்கியது. நகர்ப்புறங்களில் இருக்கும் நுகர்வோருக்கு தரமான பாலை கொடுப்பதே எங்கள் செயல்முறையில் முக்கியமானது. பண்ணையிலிருந்து தூய்மையான பாலை விரைந்து எந்த பதப்படுத்தலும் இல்லாமல் அவர்களிடம் சேர்ப்பது எங்கள் பொறுப்பு.
அதற்கடுத்ததாக, விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் அவர்களிடம் எங்களின் நோக்கம், விளைபொருட்களின் மீது கூடுதல் வருமானம் ஆகியவற்றை விளக்கி கை கோர்த்துக் கொண்டோம். அதன் பின்னர், கிராமத்து இளைஞர்களை இதனோடு இணைத்துக் கொண்டோம். நல்ல பொருளாதாரத்தை அமைத்துக் கொள்ள முடியாத இளைஞர்களை அதற்கென தேர்வு செய்தோம்.
இந்நிலையில், ஒரு புறம் விலை கொடுக்க தயாராக இருக்கும் நகர் புற நுகர்வோர், மறு புறம் விவசாயிகள் மற்றும் கிராம இளைஞர்கள், இவர்களை ஒன்றாக இணைக்கும் புள்ளியைக் குறித்து திட்டமிட்டோம். விடிய காலையில் பாலை கொள்முதல் செய்து காலை 7.30 மணிக்குள்ளாக நுகர்வோருக்குக் கொடுக்க ஆரம்பித்தோம். இதையடுத்து கிராமப் புற இளைஞர்கள் வளரத் தொடங்கினார்கள்.
உதாரணமாக, சொந்த வீடு கட்ட கடனுதவியைப் பெற, வங்கிகளைத் தொடர்ச்சியாக அலைந்த மாரிச்சாமியை சொல்லலாம். மாத சம்பளம் ரூ.8 ஆயிரம் வாங்கிக் கொண்டு, வீட்டுக் கடன் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இளைஞன். அவரை பால் வணிகத்தில் கிராம சுய தொழிலாளியாக அறிமுகம் செய்தோம். படிப்படியாக வளர்ந்த அவருடைய மாத வருமானம் தற்போது ரூ.37,500 ஆகும். தற்போது, சம்பளத்தொகையின் வங்கி பரிவர்த்தனை காரணமாக, வங்கிக் கடனுக்குத் தகுதியாகியுள்ளார்.
வெறும் 3 வாடிக்கையாளருடன் தொடங்கிய பால் நிறுவனம், தற்போது 26, 000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. செல்வகுமார் இந்த நிறுவனத்தை மேலும், 5 நகரங்களில் விரிவுபடுத்தவுள்ளார். செல்வகுமார் மற்றும் அவரது மனைவியினால் தொடங்கப்பட்ட பின்பு, யஷ்வந்த் ரங்கராஜன் மற்றும் சுதா சதாசிவம் ஆகியோருடன் இணைந்து செயல்படுகிறது.
இது குறித்து நேடிவ் லீட் சி.ஈ.ஓ கூறும் போது, இந்த பால் நிறுவனம், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத உற்பத்தி முறையைக் கொண்டுள்ளது. அதனாலே, சந்தையில் இதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. கிராமங்களில் பால் விநியோகிக்கும் அந்த பாரம்பரிய முறையினை போன்றே பால் விநியோகிக்கும் உத்தியை நிறுவன அமைப்புகளுடன் செய்கிறது வில்பிர்ஷ் லேமேன் நிறுவனம். இதன் நிறுவனர் கடந்த இரண்டு வருடங்களில், பல முன்னேற்றங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஆகவே, இதில், அதிகபட்சமான நிதியை நேடிவ் ஏஞ்சல்ஸ் நெட்வொர்க் முதலீடு செய்துள்ளது. அதனுடன் உபயா மற்றும் சங்கம் வெஞ்சர்ஸ் இணைந்துள்ளது, என்றார்.