கோவை : அ.தி.மு.க.,வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வின் மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
கோவை : அ.தி.மு.க.,வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வின் மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பா.ம.க கட்சியின் மாநில துணை தலைவர் ரஞ்சித் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- கொள்கை அடிப்படையில் நல்ல சிந்தனைகள் கொண்ட கட்சி என்ற எண்ணத்திலேயே தான் பா.ம.க.,வில் இணைந்தேன். அதன் நிறுவனர் ராமதாஸ் தனக்கு மாநில துணைத் தலைவர் பதவியும் கொடுத்தார். ஆனால், தற்போது அக்கட்சி தினமும் ஒரு சட்டை மாற்றிக் கொள்வதைப் போல, கொள்கைளை மாற்றிக் கொள்ளக் கூடாது. எந்தக் கட்சி மக்களுக்கு நல்லது செய்யும் என நம்பி கட்சியில் சேர்ந்தேனோ, அது நொடிப் பொழுதில் எனது கனவுகளை சிதைந்து போக செய்து விட்டது.

தற்போது கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க., மீது தொடர்ந்து பல்வேறு கீழ்தரத்தமான விமர்சனங்களை வைத்தவர் அன்புமணி. அந்த கட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். ஆனால், இப்போது யாரை எதிர்த்து போராடுகிறோமோ, அவர்கள் காலடியில் சரணடைந்து கூட்டணி வைத்தால், இவர்கள் எப்படி மக்களை சந்திப்பார்கள். மேலும், இவர்கள் என்ன சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பார்கள். இது குறித்து ஒரு நிமிடமாவது இவர்கள் யோசித்து பார்க்க வேண்டாமா..?.
மக்கள் தினமும் பிரச்சனைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த அரசின் அமைச்சர்கள் மீது ஊழல் விமர்சனங்கள் வைக்கப்பட்டதோ, அவர்களுடனேயே கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. மாற்றம், முன்னேற்றம் என்பது ஏமாற்றமே மிஞ்சியது. நம்பி வந்த இளைஞர்கள் மத்தியில் மண்ணைப் போட்டுவிட்டது பா.ம.க.. கோரிக்கைகளை முன்வைத்து தான் கூட்டணி அமைக்கப்பட்டது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது இந்த வருடத்தின் மிகச்சிறந்த காமெடி. இவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் முட்டாள் தனமான கோரிக்கைகளாகும்.
தற்போது அமைந்துள்ள இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தல் வரை தான் நீடிக்கும். இதன் பின்னர், கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் மாற்றம், முன்னேற்றம் என்பார்கள். மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். தற்போது, பா.ம.க.,விலிருந்து வெளியேறியதால் நிம்மதியாக உணர்கிறேன். சிங்கம் போல் இருந்த அன்புமணி நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கோழை போல பேசினார். அன்புமணியால் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை.
இவர்களால் அ.தி.மு.க.,வினருடன் ஒன்று சேர்ந்து ஓட்டு கேட்க முடியாது. அ.தி.மு.க.,வை வீழ்த்தும் வாள் என்று அன்புமணியை நினைத்தேன். ஆனால், அந்த வாளையே அ.தி.மு.க.,விடம் அடகு வைத்து விட்டார்கள். அரசியல் நாடகம் நடத்தும் போலிகளைக் கண்டறிந்து களை எடுக்க வேண்டும். மாற்றம், முன்னேற்றம் என்பது ஏமாற்றமாகி விட்டது. கட்சியினர் கொடுக்கும் 1,000, 2,000 ரூபாயிக்காக ஓட்டை விற்கக் கூடாது.
மேலும், பா.ம.க. தொண்டர்களே பா.ம.க.,விற்கு தேர்தலில் வேலை செய்ய மாட்டார்கள். நல்ல தலைமையும், ஆளுமையும் கொண்ட தலைமையுடன் நான் இணைவேன். திருடர்களுடன் சேர்ந்து கூட்டணி வைத்தால், தற்போது நன்றாக இருக்கும். ஆனால், இதற்குப் பின்னால் வருத்தப்படுவார்கள், எனக் கூறினார்.