கோவை : நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்து காட்டுத்தீ பரவி வரும் நிலையில், வனத்தை பாதுகாக்க உதவுமாறு பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை : நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்து காட்டுத்தீ பரவி வரும் நிலையில், வனத்தை பாதுகாக்க உதவுமாறு பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அண்மையில், கர்நாடக மாநில எல்லையான பந்திப்பூர் புலிகள் சரணாலய வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதி மற்றும் கோவை மாவட்ட வனப்பகுதிகளுக்கு இந்தக் காட்டுத் தீ படிப்படியாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த வனத்துறையினருடன் பொதுமக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என சேலம் வனத்துறையின் சார்பில் மாவட்ட வனத்துறை அதிகாரி ஏ. பெரியசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :- பொதுவாக, காட்டுத்தீ ஏற்படும் போது, வனங்களில் இருக்கும் வனவிலங்குகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துவிடும். அதனைப் புரிந்து கொண்டு, அவ்வாறு நுழையும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும், காட்டுத்தீயின் போது மூங்கில் மரங்கள் வெடித்து சிதறக் கூடும். இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் ஏற்படும். அதோடு, பாறைகளும் உருண்டு விழும் சூழல் இருப்பதால், வனப்பகுதிகளில் இருக்கும் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வனங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளில், பொதுமக்களும் உதவி செய்து வருகின்றனர். இந்த சூழலில், வனப்பகுதிகளில் சமைப்பது, புகைபிடிப்பது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக் கூடாது. குறிப்பாக, பொதுமக்கள் வனப்பகுதிகளுக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும், இவ்வாறு கூறினார்.
நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களைப் போன்றே காட்டுத் தீயினால் சேலம் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் பெரும்பாலான இடங்களில் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டாலும், தொடர்ந்து, காட்டுத் தீ பரவிக் கொண்டே தான் இருக்கிறது. தீயை அணைக்கும் பணியில் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே வனத்துறையினரின் எதிர்பார்ப்பாகும்.