எந்த நோக்கத்திற்காக அதிமுக கட்சியினை எம்ஜிஆர் தோற்றுவித்தாரோ அது அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், குடும்ப அரசியல் செய்யும் கட்சிதான் நம் பிரதான எதிரி எனவும் சைதை துரைசாமி புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் இல்ல விழாவில் பேசினார்.
எந்த நோக்கத்திற்காக அதிமுக கட்சியினை எம்ஜிஆர் தோற்றுவித்தாரோ அது அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், குடும்ப அரசியல் செய்யும் கட்சிதான் நம் பிரதான எதிரி எனவும் சைதை துரைசாமி புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் இல்ல விழாவில் பேசினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவு இல்லம், பாலக்காடு மாவட்டம் வடவனூரில் அமைந்துள்ளது. இந்த இல்லம் பழுதடைந்து முட்புதர்களால் மண்டிக் கிடந்தது. இதை பத்திரிக்கை செய்தி வழியாக, உலக எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவரும், மனித நேய ஐ.ஏ.எஸ் அகடாமியின் தலைவருமான சைதை துரைசாமி தெரிந்து கொண்டார். இதையடுத்து, அதனை புனரமைத்து, இன்று அதன் இல்ல திறப்பு விழா நடத்தப்பட்டது.

அதில், கலந்து கொண்டு சைதை துரைசாமி பேசியதாவது ;- ஏழை மக்களின் கடவுள் எம்.ஜி.ஆர். உலக வாழ்வியலின் நெறிமுறைகளைப் பூர்த்தி செய்து வாத்தியார் என்று அனைவராலும் போற்றப்படுபவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சொல்லுக்கும், செயலுக்கும் இடையே இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர்.
இந்நிலையில், அவர் வாழ்ந்த வீடு சேதமடைந்ததாகப் பத்திரிக்கை வழி தெரிந்து கொண்டேன். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனான எனக்கு, இந்த வீட்டைப் புனரமைக்க யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரியவில்லை. அந்த நேரத்தில், முன்னதாக எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானம் செய்த லீலாவதியைத் தொடர்பு கொண்டு இதை கூறினேன். அவர், அதற்கு மறுமொழியாக, உங்களுக்காகப் புனரமைப்பு பணிகளைச் செய்கிறேன், என்றார்.
அந்த பதில் எனக்கு கண்ணீர் வரவழைத்துவிட்டது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர். ஆகையால் தான் 16 வயதிலேயே, அவருக்காக பேனா வட்டம் உருவாக்கி, எம்ஜிஆரின் புகழை இப்போது வரை கொண்டு சேர்க்கிறேன். 54வது ஆண்டுகளாக இந்த பணியைச் செய்து வருகிறேன்.
கதாபாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்ததால் தான் அவர் புகழ் உலகெங்கும் பரவியது. நடிகர்கள் நாடாள முடியும் என உலகிற்கு காட்டியவர், எம்ஜி,ஆர். நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் வித்திட்டவர் எம்.ஜி.ஆர். 50 ஆண்டு கால திராவிட இயக்க வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் தான் காரணம். எந்த நோக்கத்திற்காக அதிமுக கட்சியினை எம்ஜிஆர் தோற்றுவித்தாரோ அது அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்ப அரசியல் செய்யும் கட்சிதான் நம் பிரதான எதிரி, இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி, முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா, புதிய கட்சித் தலைவர் சண்முகம், பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.