கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவு இல்லத்தை இன்று கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவு இல்லத்தை இன்று கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவு இல்லம், பாலக்காடு மாவட்டம் வடவனூரில் அமைந்துள்ளது. இந்த இல்லம் பழுதடைந்து முட்புதர்களால் மண்டிக் கிடந்தது. இதை பத்திரிக்கை செய்தி வழியாக, உலக எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவரும், மனித நேய ஐ.ஏ.எஸ் அகடாமியின் தலைவருமான சைதை துரைசாமி தெரிந்து கொண்டார்.
இதையடுத்து, அந்த நினைவு இல்லத்தைப் புனரமைக்க முன்வந்தார். கடந்த ஓராண்டுக்கு மேல், எவ்வித பழமையும் மாறாமல் புனரமைக்கப்பட்டு, இன்று இல்லம் திறந்து வைக்கப்பட்டது. இதனைக் கேரள ஆளுநரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான சதாசிவம் திறந்து வைத்தார்.

புனரமைக்கப்பட்ட நினைவு இல்லம் முன்பு பஞ்சாயத்து அங்கன்வாடி மையத்தையும் கேரள ஆளுநர் சதாசிவம் தொடக்கி வைத்தார்.

அவரது இல்ல நுழைவாயில் முன்பு எம்.ஜி.ஆரின் மார்பளவு பளிங்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆரை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், எம்.ஜி.ஆர் 1937ம் ஆண்டு முதன் முதலாக நடித்த சதிலீலாவதி முதல் கடைசியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படம் வரை, அனைத்து திரைப்படத்தின் பெயர்கள், ஒலிப்பேழைகள் மற்றும் உலகத்தலைவர்கள் எம்.ஜி.ஆர் பற்றி கூறிய கருத்துக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், அண்ணாதுரை, காமராஜர்,பெரியார், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சிவாஜி, என்.டி.ராமாராவ், ஜெயலலிதா ஆகியோருடனான எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, எம்.ஜி.ரின் நீண்ட கால நண்பரான தி.மு.க முன்னாள் தலைவர் மு.கருணாநிதி படம் தவிர்க்கப்பட்டிருந்தது. அதுகுறித்த காரணங்கள் தெரியவில்லை.

மேலும், இல்லத்தின் முகப்பில், எம்.ஜி.ஆர் தன் அண்ணன் சக்கரபாணியுடன் இருக்கும் படமும், அவரது தாயார் சத்தியபாமா படமும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதே நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரின் தாய் சத்தியபாமா, தந்தை கோபால மேனன் ஆகியோரது பளிங்கு சிலைகளும், ஆளுநர் சதாசிவம் கைகளால் தொடங்கி வைக்கப்பட்டது.