கோவை : இருகூர் அருகே ஓய்வுபெற்ற காவலரை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில், மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
கோவை : இருகூர் அருகே ஓய்வுபெற்ற காவலரை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில், மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இருகூர் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (70). இவரது மகன் செந்தில் குமார் (40). சுப்பிரமணியம் கடந்த 2006-ம் ஆண்டு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அவரது மகன் செந்தில்குமாருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால், செந்தில்குமார் தன் பெற்றோருடன் வசித்து வந்தார்.
மேலும், செந்தில்குமார் வீட்டிற்கு மதுபோதையில் தினம் வருவதால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மகன் செந்தில்குமார், தந்தை சுப்பிரமணியத்தை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார், கொலையாளி செந்தில்குமாரை கைது செய்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில், மது குடிப்பதற்காக செந்தில்குமார் தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் தராமல், எந்த வேலைக்கும் செல்லாமல் இவ்வாறு ஊதாரியாக சுற்றுகிறாயே என கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது தந்தையை நெஞ்சு இடுப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக கத்தியில் குத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஓய்வு பெற்ற காவலரின் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.