கோவை : அ.தி.மு.க., - பா.ஜ.க., கூட்டணி அமைத்து குறித்து மக்களவை உறுப்பினர் அன்வர்ராஜா தவறாக சொல்லக்கூடாது எனவும், அ.தி.மு.க.,வினர் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
கோவை : முன்னாள் முதலைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது மகளுடன் சேர்த்து 1,000 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தலைமையில் நடைபெற்றது.

கோவை விளாங்குறிச்சி பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, 1,000 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இதில், கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, தனது மகள் அபிநயாவிற்கும் மற்ற ஏழை, எளிய பெண்களுடன் சேர்த்து வளைகாப்பு விழா நடத்தினார். மேலும், பெண்களுக்கு சீர்வரிசைகளை ஆறுக்குட்டி வழங்கினார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி பேசியதாவது :- எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும், வரவில்லை என்றாலும் அ.தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி. மேலும், மக்களுக்கு செய்த எண்ணற்ற நலத் திட்டங்களை சொல்லி தேர்தலில் வாக்கு கேட்போம். எதிர்கட்சிகள் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களிடம் எடுபடாது. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் குடும்பத்தினர் கூட அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவரால் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. டிடிவி தினகரனை பற்றி அ.தி.மு.க.,விற்கு கவலையில்லை. தி.மு.க. தலைமையிலான எதிர்கட்சிகள் கூட்டணி வலுவில்லாதது. அக்கட்சிகளால் வெற்றி பெற முடியாது, என்றார்.
இதனிடையே, அ.தி.மு.க., ஆட்சியை காப்பாற்ற தான் பா.ஜ.க.,வுடன் கூட்டணி என்ற மக்களவை உறுப்பினர் அன்வர்ராஜா கருத்து குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- ஆட்சியை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு ஆண்டுகளாக ஆட்சி சென்று கொண்டுள்ளது. அன்வர்ராஜா கூட்டணி குறித்து தவறாக சொல்லக்கூடாது. அ.தி.மு.க.,வினர் கட்டுகோப்புடன் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெறச்செய்ய வேண்டும், என அவர் தெரிவித்தார்.