கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய சேவை மையத்தை திறந்து வைக்க வந்த அமைச்சரை, நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், அரசு அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்தும், மேளம் கொட்டியும் வரவேற்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் மற்றும் (DEIC) மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மைய தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் அமைச்சர்களுக்கு மருத்துவமனை நுழைவு வாயிலில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல, அமைச்சர்கள் மருத்துவமனைக்குள் வந்தவுடன் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர் மத்தளம் அடித்து வரவேற்றார். இது மருத்துவமனையில் இருந்தவர்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தியது. பின்னர், அமைச்சர்கள் மேளத்தை நிறுத்தும்படி கூறியதையடுத்து, மேளம் அடிப்பது நிறுத்தப்பட்டது.

மருத்துவமனை முன்பு சத்தம் எழுப்பக் கூடாது என்ற விதி இருக்கும்பட்சத்தில், மருத்துவமனை வளாகம் அருகே பட்டாசுகளை வெடிப்பதும், மேளம் அடித்து சத்தத்தை எழுப்புவதையும் கண்டிக்காத அரசு அதிகாரிகளின் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.