செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில், போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வரும் மார்ச் 4-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில், போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வரும் மார்ச் 4-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் போராளியுமான முகிலன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் சில காவல்துறை உயரதிகாரிகள்தான் என்றும், ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை காவல்துறை அரங்கேற்றியதாகவும் கூறி வந்த அவர், அதற்கான வீடியோவையும், ஆவணங்களையும் கடந்த 15-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்த நிகழ்வு முடிந்து அன்றைய தினம் இரவு 10 மணிக்கு மதுரைக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்த முகிலன் திடீரென காணாமல் போனார். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சியில் ரயில்நிலையம் வரை வந்த அவர், அதன்பிறகு மாயமானது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, சமூக செயற்பாட்டாளரான முகிலன் காணாமல் போனது தொடர்பாக பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், எழும்பூர் ரயில்வே நிலைய போலீஸார் மற்றும் திருவல்லிக்கேணி போலீஸார் முகிலன் குறித்து விசாரணையை நடத்தி, அந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
அதேபோல, அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து, சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
அறப்போர் இயக்கத்தின் ஆலோசகர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது :- முகிலனின் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு கவலையாக இருக்கிறது. அவர் தங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். மேலும், முகிலன் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முகிலன் மாயம் குறித்து ரயில்வே போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ள நிலையில், அவர் வெளியே எங்கேனும் காணாமல் போயிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, சி.சி.டி.வி., காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்த வேண்டும், என்றார்.
இதேபோல, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளரிடம் கூறுகையில், "சமூக விரோத செயல்களுக்கு எதிராக போராடி வரும் முகிலனுக்கு எதிராக, இந்த அரசு பல்வேறு மிரட்டல்களை விடுத்து வருகிறது. கூடங்குளத்திற்கு எதிராகப் போராடி வரும் முகிலனை போலீசார் ஓடும் ரயிலில் வைத்து கைது செய்துள்ளனர். அவரது மொபைல்போனின் சிக்னலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் எங்கிருக்கிறார் என்பதை அறிய முடியவில்லை. மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதனடிப்படையில், அவரை நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். முகிலன் பாதுகாப்பாக திரும்பி வரவேண்டும் என்பதற்காக பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து போராடி வருகின்றன," என்றார்.