கோவை : கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளின் மறுவாழ்வை மையப்படுத்தி 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பெட்ரோல் பங்கினை தமிழக முதல்வர் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
கோவை : கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளின் மறுவாழ்வை மையப்படுத்தி 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பெட்ரோல் பங்கினை தமிழக முதல்வர் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
சிறைச்சாலை என்பது சிறையிலுள்ள குற்றவாளிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும். சிறையில் இருப்பவர்கள் மறுவாழ்வு மற்றும் விடுதலைக்கு பின் அவர்கள் சமுதாயத்தில் நல்லதொரு வாழ்க்கையை நடத்த தேவையான ஏற்பாடுகளையும் சிறைத்துறை செய்து தரவேண்டும். இந்த அடிப்படையில், சிறைவாசிகளுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகளை சிறைத்துறை நிர்வாகம் அளித்து வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே, கோவை மத்திய சிறை மைதானத்தில் சிறை சந்தை அமைத்து சிறைவாசிகளுக்குத் தேவையான வேலை வாய்ப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறை சந்தையை விரிவுபடுத்தும் விதமாக மத்திய சிறைகளில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தை அமைத்திட முயற்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோவை, வேலூர், பாளையங்கோட்டை போன்ற மத்திய சிறைகளில், பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிட தமிழக அரசு ஆணையிட்டது.
இதையடுத்து, இன்று டாக்டர் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே ரூ.2 கோடி மதிப்பிலான பெட்ரோல் பங்கினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்துள்ளார். இந்த விற்பனை நிலையம் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. மேலும், இந்த விற்பனை அனைத்தும் சிறை கைதிகள் மூலமாகவே நடைபெற உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனங்களுக்கு ஆயில் மாற்றி தருதல், இலவசமாகக் காற்று நிரப்புதல் ஆகிய பணிகளும் நடைபெறவுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக, மத்திய சிறை நிர்வாகம் சார்பில் மற்றொரு பெட்ரோல் பங்க் தொடங்க உள்ளதாக சிறை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் அறிவுடைநம்பி, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் சுரேஷ் ஆகியோர் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், சிறை நிர்வாகத்தினர் கைதிகள் என பலர் கலந்து கொண்டனர்.