கோவை : பீளமேட்டை அடுத்த கொடிசியா சாலையில் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை : பீளமேட்டை அடுத்த கொடிசியா சாலையில் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பீளமேடு அருகே கொடிசியா தொழிற்காட்சியகம் உள்ளது. இந்த கொடிசியா தொழிற்காட்சியகம் சாலையை சுற்றி மொத்தம் 4-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும், 5 கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல, நீண்ட சாலையான இந்த சாலையில் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டி வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், நேற்று மாலை 4.42 மணியளவில் TN 38 AJ 1383 என்ற எண் கொண்ட சொகுசு காரும், மற்றொரு சொகுசு காரும் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு ஜென்னி கிளப் பகுதியில் இருந்து கொடிசியா சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது, இஸ்கான் கோயில் சாலையிலிருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் தனது வாகனத்தை திருப்பினார். சற்றும் எதிர்பாராதவிதமாக, அசுரவேகத்தில் வந்த சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டார். இருப்பினும், காரை ஓட்டி வந்த மர்ம நபர், காரை நிறுத்தாமல் மீண்டும் அதிவேகமாக சென்றார். இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் அதிவேகமாக சென்ற காரை துரத்திச் சென்று பிடிக்க முற்பட்டனர். ஆனால், கார் சென்ற வேகத்திற்கு பிடிக்க முடியவில்லை. பின்னர், தகவலறிந்து வந்த பீளமேடு போக்குவரத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், இவர் படிப்பதற்காக கோவையில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அதேபோல, விபத்தை ஏற்படுத்தியவர் குனியமுத்தூரைச் சேர்ந்த தட்ஷனா ரூத் என்ற இளம்பெண் என்பதும், இவர் விபத்து ஏற்பட்ட அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்தப் பெண்மணி மீது (337)உயிருக்கு அல்லது தனி நபருடைய பாதுகாப்பிற்கு ஒரு செயலால் காயம் ஏற்படுத்துதல், (279) பொது இடத்தில் அஜாக்கிரதையாக வண்டி ஓட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.