கோவை : பீளமேடு அருகே உள்ள கொடிசியாவில் அதிவேகமாக கார் ஒன்று, சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மோதச் செய்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : பீளமேடு அருகே உள்ள கொடிசியாவில் அதிவேகமாக கார் ஒன்று, சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மோதச் செய்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீளமேடு அருகே கொடிசியா தொழிற்காட்சியகம் உள்ளது. இந்த கொடிசியா தொழிற்காட்சியகம் சாலையை சுற்றி மொத்தம் 4-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும், 5 கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல, நீண்ட சாலையான இந்த சாலையில், கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டி வருகின்றனர். இதனால், இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, காலை மற்றும் மாலை என இருநேரங்களில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருப்பதால், இந்த கொடிசியா வளாகத்தின் முன்பகுதியில் உள்ள மூன்று வளைவு சாலையில் தினமும் இரண்டுக்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்படுகின்றன. அதேபோல, ஜென்னி கிளப் சாலை துவக்கப்பட்ட இடத்திலிருந்து கொடிசியா வரை இறக்கமான பகுதி என்பதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.
இந்த நிலையில், இன்று மாலை 4.42 மணியளவில் TN 38 AJ 1383 என்ற சொகுசு காரும், மற்றொரு சொகுசு காரும் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஜென்னி கிளப் பகுதியில் இருந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகம் சாலை வழியாக அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது, இஸ்கான் கோவில் சாலையிலிருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் வாகனத்தை வளைத்துள்ளார்.

அப்போது, விதியை மீறி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், சீறிப் பாய்ந்து வந்த சொகுசு கார், இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மேலே தூக்கி வீசப்பட்டார். பின்னர், அந்த கார், விபத்து நடந்த இடத்தில் நிறுத்தாமல், மீண்டும் அதிவேகமாக அங்கிருந்து சென்றது. இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், அதிவேகமாக சென்ற காரை துரத்திப் பிடிக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் கார் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்று விட்டது.
பின்னர், தகவலறிந்து வந்த பீளமேடு போக்குவரத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் கண்டிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகளாகத் தான் இருக்கும் என இப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய காரில் பிளேக் டிண்ட் ஒட்டப்பட்டிருந்ததால், காரை ஓட்டி வந்தது ஆணா..? பெண்ணா..? என்பதும் தெரியவில்லை.
இந்த சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், விபத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டிய நபர்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.