“மாற்றம், முன்னேற்றம், அன்புமணி…”,என முழங்கி வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக -பாமக கூட்டணியை ‘மெகா கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி, வெற்றி கூட்டணி” என சொல்லத் தொடங்கியிருக்கிறார்.
“மாற்றம், முன்னேற்றம், அன்புமணி…”,என முழங்கி வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக -பாமக கூட்டணியை ‘மெகா கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி, வெற்றி கூட்டணி” என சொல்லத் தொடங்கியிருக்கிறார்.
இந்த முன்னேற்றமான மாற்றத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியவை ;-
திமுக, அதிமுகவோடு கூட்டணி வைக்கமாட்டோம் என பத்திரத்தில் கையெழுத்து போட்டுதரட்டுமா என செய்தியாளர்களிடம் கேட்ட டாக்டர்.ராமதாஸ் தான், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருக்கிறார். மேலும், பார் உள்ள வரை, கடல் உள்ள வரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணியில்லை என்றார், டாக்டர் ராமதாஸ்.
“திராவிடகட்சிகளுடன் நூறுசதவீதம் அல்ல, நூற்றொரு சதவீதம்கூட்டணி கிடையாது, கிடையாது, கிடையாது” என்றார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
டாக்டர்.அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் :
"எடப்பாடி பழனிசாமி இவரெல்லாம் முதலமைச்சரா? இவருக்கு தெரிந்தது எல்லாம் ஊழல் மட்டுமே, அடுத்த தேர்தலில் முதலமைச்சர் சொந்த தொகுதியில் டெபாசிட் இழப்பார்”என்றெல்லாம் பேசிய தனது பேச்சையே, அன்புமணி மறந்துவிட்டார் போலும், குட்கா அரசு, குட் அரசாக பாமகவிற்கு மாறியிருக்கிறது என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தேர்தலுக்கு தேர்தல் மாறி மாறி கூட்டணி வைப்பதும், நேற்றொரு பேச்சு, இன்றொரு பேச்சு என்பதும் பாமகவின் வரலாறு. கை நழுவிய யானை, இனித்த மாம்பழம்!
பா.ம.க கட்சியின் வரலாறு :
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டம். வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு வட தமிழகத்தில் போராட்டங்கள் நடக்கின்றன. அதை அடக்கி ஒடுக்க முயன்ற அரசை, மரங்களை சாலையில் வெட்டிபோட்டு ஸ்தம்பிக்க வைத்தனர்.
இந்த போராட்டங்கள் டாக்டர் ராமதாஸூக்கு அடையாளம் தந்தன. தேர்தல்பாதை, திருடர்பாதை, தேர்தலை புறக்கணியுங்கள் என்பதே அவர் வைத்த முதல் முழக்கம்.
அந்த முழக்கம் எடுபடாத நிலையில், 1989ம் ஆண்டு உதயமானது பாட்டாளி மக்கள் கட்சி. 1989 தேர்தலில் தனித்து போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. 1991ம் ஆண்டு யானை சின்னத்தில் தனித்து களம் கண்டது பாமக.
ஒரு தொகுதியில் வெல்லவும் செய்தது. பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரான பன்ருட்டி ராமச்சந்திரனை, யானை மீது அமர்த்தி சட்ட சபைக்கு அனுப்பிவைத்தார் ராமதாஸ். ஆனால், நாடாளுமன்றத்தில் பூஜ்யமே கிடைத்தது.
1996 தேர்தலில் திமுக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக, காங்கிரஸ் ஒரு அணியாகவும் போட்டியிட தயாராகி கொண்டிருந்தனர்.
மதிமுக தலைமையில் பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் நடந்தன.
ஆனால், யார் தலைமை ஏற்பது என்பதில் சிக்கல் முளைத்தது. அதில் மூன்றாவது அணி முழுமை பெறாமல், பாதியிலேயே உடைந்து போனது. வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளை கொண்ட 'ஊழல் ஒழிப்பு - சமூகநீதி முன்னணி'யை டாக்டர் ராமதாஸ் உருவாக்கினார்.
பாமக சார்பில் ஜி.கே.மணி உள்ளிட்ட 4 பேர் சட்டமன்றத்துக்கு தேர்வாகினர். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதன் பின்னர் யானை சின்னம் கைவிட்டு போக, மாம்பழம் சின்னம் பாமகவிற்கு இனித்தது.
மாற்றமே மாறாதது!
அடுத்து வந்த 1998 நாடாளுமன்ற தேர்தலில் பாமக, அதிமுக அணிக்கு வந்திருந்தது. பாஜக, மதிமுகவும் அதே அணியில் இருந்தன. அதில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 இடங்களை கைப்பற்றியது.
1999 மக்களவை தேர்தலில் பாமக, பாஜக, திமுக, மதிமுக, தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து, 5 இடங்களில் வென்றது. மத்திய அமைச்சரவையிலும் பாமக இடம்பெற்றது.
2001 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி பாமக, அதிமுக அணியில் சேர்ந்து கொண்டது. அப்போது, "கருணாநிதியோ பெரிய அண்ணன் தோரணையுடன் எங்களை அழிக்க பார்க்கிறார். ஆனால், அன்பு சகோதரியோ எங்கள் மீது நட்பு பாராட்ட விரும்புகிறார். அதன் காரணமாகவே, அதிமுக அணியில் பாமக இணைந்திருக்கிறது", என்றார்.
27 தொகுதிகளில் போட்டியிட்டு பாமக 20 தொகுதிகளில் வென்றது. 2004 தேர்தலில் மீண்டும் திமுகவோடு கைகுலுக்கியது பாமக. 5 தொகுதிகளையும் கைப்பற்றியது. தேர்தலில் போட்டியிடாமல், மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் சென்ற அன்புமணி ராமதாஸ், சுகாதார துறை அமைச்சராக பதவியேற்றார்.
ரயில்வே துறை இணையமைச்சராக இரா.வேலு பொறுப்பேற்றார். 2006 தேர்தலில் திமுக கூட்டணியிலேயே நீடித்த பாமக, 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது.
சறுக்கிய பாமக !
இப்படி பாமக எங்கே செல்கிறதோ, அங்கே வெற்றி உறுதி என பரவலாக நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையை உடைக்க வந்தது, 2009 மக்களவை தேர்தல். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 6 தொகுதிகளிலும் தோல்வியுற்றது.
அடுத்த 2011 தேர்தலில் திமுக பக்கம் சென்றது பாமக. 30 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 3 தொகுதிகளே கிடைத்தன. தொடர் தோல்விகளால் துவண்ட பாமக, 2011 ல் திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்தது.
ஆனால், திராவிட கட்சிகள் அங்கம் வகித்த பாஜக கூட்டணி பக்கம் 2014ல் கரை ஒதுங்கியது. தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து 7 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரே ஒரு தொகுதியில் வென்றது. முதல் முறையாக, தேர்தலில் போட்டியிட்டு தருமபுரி தொகுதியில் வெற்றி பெற்ற அன்புமணி ராமதாஸ் சுகாதார துறை அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், அவர் மீதான ஊழல் வழக்கு, போதிய இடங்கள் கிடைக்கததால் எதிர்பார்ப்பு ஏமாற்றமானது.
இதையடுத்து, மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என 2016ல் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கினார், அன்புமணி ராமதாஸ். அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி. மீண்டும் தனித்து போட்டியிட்டால், தனித்து விடப்படுவோம் என்பதை உணர்ந்து 2018 டிசம்பரில் கோவையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றும் வகையில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக பாமக அறிவித்தது.
கூட்டணி கணக்கு :
அதிக இடங்களை கைப்பற்ற வேண்டுமெனில், கொள்கைகள் பேசி பலனில்லை. பேசியதை எல்லாம் மறந்து திமுக அல்லது அதிமுக பக்கம் தான் செல்ல வேண்டும். இரு பக்கமும் கல்லை வீசி பார்த்தது. பல கட்சிகளை தனதுஅணியில் திமுக ஏற்கனவே சேர்த்திருப்பதால், போதிய இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் சேர்ந்தால், சாதிஒட்டுகளை இழக்க நேரிடும்.
திமுகவோடு செல்வது திமுகவிற்கே சாதகம், பாமகவிற்கு அல்ல என்பதையும், போதிய பலன் கிடைக்காது என்பதையும் அலசி ஆராய்ந்து உணர்ந்திருந்தது பாமக. அதேசமயம் பாஜக, அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணியில் சேர்ந்தால் வலுவான கூட்டணியாகவும் இருக்கும். வேண்டிய தொகுதிகளை கேட்டுப் பெறுவதோடு, ஒரு சில இடங்களில் வென்று மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று விடலாம் என்பது பாமகவின் தேர்தல் கணக்கு.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகள் ஒரு மாநிலங்களவை தொகுதி என உடன்பாடு எட்டப்பட்டது. மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளதாக கூறுகிறார், டாக்டர் இராமதாஸ். கூட்டணிக்காக பத்து அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த பத்து அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு ;-
1.காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்
2.தமிழ்நாட்டின் முக்கிய 20 நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்
3.சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
4.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளஏழு தமிழர் விடுதலை
5.படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
6.மணல் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும்
7.அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
8.மேகதாது அணைக்கு தடை
9.கூட்டுறவு வேளாண் கடன் தள்ளுபடி
10. நீட் தேர்விலிருந்து விலக்கு ஆகிய கோரிக்கைகளில், 'ஏழு தமிழர் விடுதலை' என்பது முக்கியமான கோரிக்கை என டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
இதனிடையே, கூட்டணிக்காக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் எதிர்கட்சிகளால் கடும் விமர்சினத்திற்கு உள்ளாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றாத அதிமுக, இனி நிறைவேற்றுமா?, நீட் தேர்வு ஆதரவாக உள்ள பாஜகவும் இதே கூட்டணியில் தான் உள்ளது. இவை எப்படி சாத்தியமாகும்?, இது சந்தர்பவாத கூட்டணி என்பது எதிர்கட்சிகளின் விமர்சனமாக உள்ளது.
யாருக்கு இலாபம்?
தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதுநாள் வரை ஆட்சி நீடித்தற்கு காரணம் மத்திய அரசின் ஆதரவே. அதற்கு நன்றி கடனாக 5 மக்களவை தொகுதிகளை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.
அதே சமயம், இடைதேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைய விட, மாநிலத்தில் ஆட்சி தொடர வேண்டுமென்பதையே அதிமுக விரும்புகிறது. அதற்கு கூட்டணிகட்சிகளின் ஆதரவு பலனளிக்கும் என நினைக்கிறது.
நாடாளுமன்றத்தில் விட்டு கொடுத்து, சட்டமன்றத்தில் தக்க வைக்க வேண்டுமென்பது அதிமுக திட்டம். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 25க்கும் குறைவான தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிடும்.
மேலும், கருத்துக்கணிப்புகளும், அதிமுகவிற்கு பாதகமாகவே இருக்கின்றன. பாமகவின் சாதிஒட்டுக்கள் பாமக ஒரிரு தொகுதிகளில் வெல்லவும், அதிமுக சில தொகுதிகளில் வெல்லவும் உதவுமென கணித்துள்ளது அதிமுக.
அதே சமயம், தேமுதிகவிற்கும், பாமகவிற்கும் ஏழாம் பொருத்தம் தான். பாமகவில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்த ஜெ.குருவின் குடும்பம், ராமதாஸ்க்கு ஏதிராக திரும்பியிருப்பது வாக்குகளை சிதறடிக்க வாய்ப்புண்டு. பாஜக ஒரிரு தொகுதிகளில் வெல்ல இக்கூட்டணி பலம் கை கொடுக்கலாம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் தனித்து போட்டியிட்டு வென்று, நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்திருந்தது. இந்த எண்ணிக்கையை வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு சேர்த்து கூட கைப்பற்ற முடியாது என்பது அதிமுகவிற்கும் தெரியும். வலுவான எதிர்கட்சிகளின் கூட்டணி, ஒபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்திருந்தாலும் மனங்கள் இணையவில்லை.
குறிப்பாக, சிறுபான்மை வாக்கு இழப்பு, பாஜக எதிர்ப்பு மற்றும் அதிமுக அதிருப்தி வாக்குகளை கைப்பற்ற டிடிவி தினகரன் என பல காரணங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றன. அதிமுக - பாமக - பாஜக கூட்டணி என்பது பாமகவிற்கும்,பாஜகவிற்கும் முன்னேற்றம் தரலாம். அதிமுகவிற்கு நிச்சயமாக பின்னடைவே!