கோவை : விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாகப் எழும்பியுள்ள புகார் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாகப் எழும்பியுள்ள புகார் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகாவை சேர்ந்த தம்பதிகள் விஸ்வநாதன் (28), சித்ரா (25). இவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 -ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும், அந்த மருத்துவமனையில் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, குழந்தையை சுமார் 32 நாட்கள் மருத்துவமனையிலே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2018 -ம் ஆண்டு ஜூலை 11ம் தேதியன்று அவர்களின பெண் குழந்தை மஞ்சுவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திடீரென உடல்நிலை மோசமானது. இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், குழந்தை மஞ்சுவிற்கு இருதய நோய் உள்ளதாக தெரிய வந்ததுள்ளது. இதனால், குழந்தையை மேல் சிகிச்சைக்காக அன்றே 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், குழந்தை அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளான 12ம் தேதியே மருத்துவர்கள் இரத்தம் ஏற்றியுள்ளனர். இதில், திடீரென மருத்துவர்கள் குழந்தைக்கு ரத்தம் ஏற்றும் குடுவையை அருகாமையில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டதாக அதை நேரில் கண்ட குழந்தையின் தந்தை விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மருத்துவர்களிடம் ஏன் இரத்தம் ஏற்றுவதை பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மருத்துவர்கள், முதியோரின் இரத்தம் என தெரியாமல் ஏற்றி விட்டதாக விஸ்வநாதனிடம் தெரிவித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் 13ம் தேதி அன்று குழந்தையை உள்நோயாளிக்கான சிகிச்சை முடிந்து விட்டது என டிஸ்சார்ஜும் செய்து விட்டனர். இதற்கிடையில், குழந்தைக்கு காதின் கீழ்ப்பகுதி மற்றும் உடம்பின் சில பகுதிகளில் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து சிறுசிறு கட்டிகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மாதம் 6ம் தேதி குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர்கள் அனுமதித்தனர்.
இதையடுத்து, குழந்தைக்கு கடந்த 8ம் தேதி மருத்துவர்கள் சோதனை செய்துள்ளனர். இதில், குழந்தைக்கு எச்ஐவி இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். அதே போலவே, குழந்தையின் பெற்றோர்களுக்கு சோதனை செய்ததில், அவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையுடன் பிறந்த ஆண் குழந்தைக்கும் மருத்துவ பரிசோதனை செய்ததில் எச்ஐவி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் பொறுப்பாளர்கள் கூறியதாவது ;- குழந்தையின் தந்தை விஸ்வநாதன் எங்களிடம் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில், அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு இரத்தம் ஏற்றப்பட்ட நிகழ்வும், மேலும் ரத்தம் பாதியில் நிறுத்தப்பட்டு குப்பையில் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் தகவல்களும் கோவை அரசு மருத்துவமனை மீது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

"என் குழந்தை இருதய நோயினால அவதிப்பட்டு வந்தாள். இதனால், என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு திருப்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்த்தோம். பின்பு, அங்கிருந்த மருத்துவர்களே, மேல் சிகிச்சைக்காக குழந்தையை அந்த நாளே கோயம்புத்தூர் பெரிய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தார்கள். அடுத்த நாள் என் மகளுக்கு ரத்தம் ஏற்றினார்கள்.
என் மனைவி சாப்பிட சென்ற நேரம், நான் என் குழந்தை கூட இருந்தேன். அப்போது, ஒரு டாக்டர் ரத்தம் ஏறும் போது, வேண்டாம் என சொல்லி, பிடுங்கி குப்பைத் தொட்டியில் போட்டார். அதன் பிறகு, நான் டாக்டரிடம் போய் கேட்டேன். அதற்கு அவர், 'அந்த இரத்தம் வயசானவங்க இரத்தம். அதனால வேணாம், அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு',இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், என் குழந்தையின் வாழ்க்கை இந்த அளவுக்கு ஆகும் என நான் நினைக்கவில்லை.
எனக்கு இரட்டை குழந்தையாக இருக்கும் போது ஒரு குழந்தைக்கு மட்டும் இந்த நோய் எப்படி வந்திருக்கும். இதுக்கு முழுக்க முழுக்க கோயம்புத்தூர் பெரியாஸ்பத்திரி தான் பொறுப்பு. அதனால், என் குழந்தைக்கு வந்திருக்கும் இந்த மோசமான நோயை பெரிய ஆஸ்பத்திரி டாக்டர்கள் தான் சரி பண்ணி கொடுக்க வேண்டும்," என கண்ணீர் வர வர துடைத்துக் கொண்டே பேசினார் குழந்தையின் அப்பா.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பல ஆய்வுகளை செய்து ஆவணங்களை தயார்படுத்திக் கொண்ட மக்கள் கண்காணிப்பகத்தினர் சி.பி.ஐ விசாரணை வைத்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான ஆசிர்வாதம் கூறியதாவது :-குழந்தை பிறந்த போது எச்.ஐ.வி பாதிப்பு இல்லை. அதே போல, குழந்தையின் பெற்றோர்களுக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். ஒரே பிரசவத்தில் பிறந்த மற்றொரு குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லை. இப்படி இருக்க, கோவை அரசு மருத்துவமனையில் அந்த பெண் குழந்தைக்கு இரத்தம் ஏற்றிய பின்பு ஏற்பட்ட பின்விளைவுகளின் காரணத்தை தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு பின்பு தான் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி இருதய நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 13ம் தேதி அன்றே டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய சூழல் வந்ததன் அவசியம் என்ன, இருதய நோய்க்கான சிகிச்சைக்கு மூன்று நாட்கள் போதுமானதா என்ற கேள்விகளே, மருத்துவர்கள் குற்றத்தை மறைக்க பார்க்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அதே போல, குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் சார்பில் மருத்துவமனையில் கேட்டபோது, அவர்கள் குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளார்கள். ஆகவே, வேறு ஏதாவது இடத்தில் குறைபாடுகள் ஏற்பட்டு இருக்கும், என தெரிவித்தனர்.
ஆனால், நாங்கள் பெற்றோரிடம் விசாரித்ததில் குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்ததை தொடர்ந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்து உடனடியாக அதே நாளில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளது தெரியவந்ததுள்ளது.
மேலும், குழந்தைக்கு பிறக்கும்போதே எச்ஐவி பாதிப்பு இருந்திருந்தால், மருத்துவ தகவலில் தெரியவந்திருக்கும். அதேபோல, திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சையில் ஏதும் இன்றி தான் மேல் சிகிச்சைக்காக உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒருவேளை ஏற்கனவே ஏதோ மருத்துவமனையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற முதல் சிகிச்சையில் எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கும்.
ஆனால், இந்த பிப்.6ம் தேதி அன்று இரண்டாவது சிகிச்சையின் போது தான் எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் கண்காணிப்பகத்தின் ஆய்வின் அடிப்படையில், கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதற்குப் பின்பு தான் இந்த குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
"கோவை அரசு மருத்துவமனையில் எந்த விதமான தவறுகளும் நிகழவில்லை. குழந்தை பிறந்ததில் இருந்து பல இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதால், வேறு இடங்களில் இருந்து எச்.ஐ.வி பரவி இருக்கலாம். இந்த புகார் நேற்று மதியம் தான் வந்தது. இது தொடர்பாக, ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் எந்த தவறும் நிகழவில்லை," என மறுப்பு தெரிவித்துள்ளார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் டாக்டர் அசோகன்.
நாம் அனைவருமே, நோய்களைத் தீர்க்க மருத்துவமனைக்கு செல்கிறோம். ஆனால், கடந்த சில வருடங்களாக நோய்களை மருத்துவமனையில் இருந்து வாங்கி வரும் துயர சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதனால், பொதுமக்கள் மத்தியில் பயம் பரவ தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.