கோவை : தங்களது நிலத்தை அமைச்சரின் அண்ணன் பெயரை பயன்படுத்தி பறிமுதல் செய்ய முயற்சிப்பதாகக் கூறி மூதாட்டி ஒருவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை : தங்களது நிலத்தை அமைச்சரின் அண்ணன் பெயரை பயன்படுத்தி பறிமுதல் செய்ய முயற்சிப்பதாகக் கூறி மூதாட்டி ஒருவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமாத்தாள் (85). இவர் தனது மகன் ரங்கசாமியுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது ;- எனக்கும், என் மகனுக்கும் சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதனை, நாங்களே பராமரித்து வந்த நிலையில், தோட்ட வேலைக்கு உதவியாக சிவக்குமார் என்பவரை சிறிது காலத்திற்கு முன்பு அமர்த்தினோம். மேலும், அவர் தங்க தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டை ஒதுக்கி கொடுத்திருந்தோம். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் சிவக்குமார் தனது உறவினர்களுடன் வந்து நிலத்தை உழ முயற்சித்தார். இதனை தட்டி கேட்ட என்னையும், எனது மகன் ரங்கசாமியையும் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதையடுத்து, நீங்கள் செய்வது சரிதானா என சிவக்குமாரிடம் கேட்டதற்கு, எங்களுக்கு அமைச்சர் அண்ணனிடம் செல்வாக்கு உள்ளதாக கூறி மிரட்டினார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்று கூறினர், இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ராமாத்தாள் கூறும் போது, எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை, அமைச்சரது பெயரை பயன்படுத்தி நயவஞ்சகமாக ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கின்றனர். காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. எனவே, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையே, மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகவும் அளித்தார்.