கோவை : குறைந்த மழைப்பொழிவின் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், தீத்தடுப்பு பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முக்கிய காரணங்களின்றி விடுப்பு எடுக்கவோ வெளியூர் செல்லவோ தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை : குறைந்த மழைப்பொழிவின் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், தீத்தடுப்பு பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முக்கிய காரணங்களின்றி விடுப்பு எடுக்கவோ வெளியூர் செல்லவோ தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 33 செமீ மழை பதிவானது. இது வழக்கமான மழைப்பொழிவை விட 24 சதவிகிதம் குறைவானதாகும். இதில், கோவை மாவட்டத்தின் வனம் சார்ந்த பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் வழக்கத்தை விட 50 சதவிகிதம் குறைவாகவே இந்த ஆண்டு மழை பெய்துள்ளது. இதனால் போதிய நீரின்றி வனத்தில் உள்ள செடி கொடிகள் காய்ந்து காட்டுத்தீ எளிதில் பரவும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதம் தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் பலியான நிலையில், இவ்வாண்டு கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வன அளவை நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோள் உதவியோடு தீ பரவும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கும் வனத்துறையினர், மாவட்ட வன அலுவலகத்தில் தீத்தடுப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு, அங்கிருந்து இருபத்திநான்கு மணிநேரமும் வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தீ குறித்த தகவல்களை பெறுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக கூறுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சிறுமுகை வனச்சரகதிற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலையின் இருபுறமும் அடர்ந்த காடுகள் உள்ளதால் இப்பகுதியில் தீத்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வன சாலைகளில் பயணிப்போர் சிலர் புகை பிடித்துவிட்டு நெருப்புடன் சிகரெட் பீடி போன்றவற்றை வீசுவதால் சாலையோரம் காய்ந்து கிடக்கும் புதர்களில் காட்டுத்தீ எளிதில் பிடித்து பரவி விடுகிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது இம்மலைப்பாதையின் இருபுறமும் காய்ந்து கிடக்கும் புற்கள் மற்றும் செடிகொடிகளை அகற்றி சாலையின் ஓரங்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. காய்ந்த புதர்களை வெட்டி அதனை வனத்தையும் சாலையினையும் இணைக்கும் பகுதிகளில் நீண்ட கோடுகளை போல் வைத்து அதில் மிக கவனமாக தீவைத்து விட்டு அவை எரிந்த பின் அணைத்து விட்டால் அங்கு தீயில் கருகிய கோடு உருவாகி விடுகிறது.
இதனால், பிற செயற்கையான காரணங்களினால் தீ பிடித்தாலும், கருகிய கோட்டை தாண்டி நெருப்பு பரவாது என்பதால் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவிற்கு இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், முப்பதிற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து பணியாற்றி வருகின்றனர்.